பண்டித,
அ. கந்தசாமிப் பிள்ளை அவர்களின் நுண்பொருட்
குறிப்புரை மிகவும் பயனுடையதாயிருக்கிறது. பழம் புலவர் வரிசையைச்
சேர்ந்த முதுபெரும் புலவர், திரு. பிள்ளை அவர்கள் ஆங்காங்கு விதந்து
கூறிய உரைகளும் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோள்களும் திருமுறைப்
பாடல்களைப் பலரும் எளிதில் படித்து அநுபவிக்கத் தூண்டுகிறது.
புத்தக
முகப்பில் அமைந்துள்ள பெரும் பொருட் கட்டுரைகள்
நூலுக்குள் நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.
சைவசித்தாந்தத்
தத்துவ உணர்ச்சியோடு எழுதப்பெற்றுள்ள அடியார்
பெருமை சிறப்புற அமைந்துள்ளது.
சிங்காரவேலனாருடைய
இயற்கைப் பொருளின்பக் கட்டுரை வியத்தகு
முறையில் அமைந்து படிக்கும்தோறும் இன்பந்தருகிறது.
இத்தகு
சீரிய முறையில் திருமுறையை அச்சிட்டு வழங்கியுள்ளது
திருத்தருமை ஆதீனம். திருத்தருமை ஆதீனத்தின் தொண்டுகள் பலப்பல.
தருமையும் கமலையும் விரிதமிழ்க்கூடலும் திருநகராக அரசுவீற்றிருந்து மேன்மைகொள் சிவநெறியும்
செந்தமிழும் புரந்தருளும் ஸ்ரீலஸ்ரீ
மகாசந்நிதானம் அவர்களின் திருவருளுக்கு நெஞ்சங்கலந்த நன்றி. சைவத்
தமிழுலகு அருளாட்சியை வாழ்த்துகிறது. இவ்வையகம் வாழ்வதற்காக
வாழ்த்துகிறது.
|