பக்கம் எண் :

494திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2935. நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
  மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.      4

2936. வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
  ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.      5


     4. பொ-ரை: வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், மேரு மலையை
வி்ல்லாகவும் கொண்டு, ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை அழித்த
மாண்புடைய சிவபெருமான், கமுக மரங்கள் நிறைந்த சோலைகளால்
அழகுடன் திகழும் திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வெல்லப்பாகு
போன்று இனிமையாகப் பேசுகின்ற உமாதேவியைப் பாகமாகக் கொண்டு
வீற்றிருந்தருளுகின்றார். அவரைத் தரிசித்துப் பிறவிப்பயனை அடையுங்கள்.

     கு-ரை: நாகமும் வரையுமே நாணும் வில்லும் ஆக எனக் கொள்ள
நிற்றலால் இது நிரனிறை. மாகம் ஆர்-ஆகாயத்துப் பொருந்திய.
புரங்களை-திரிபுரங்களை. மறித்த-அவர் வழியிற் செல்லாது தடுத்துத்
தொலைத்த. மாண்பினர்-மாட்சிமையுடையவர். பூகம்-கமுகு. பாகம்
ஆர்மொழி-இனிமை தங்கிய மொழி. பாகு+அமர் மொழி என்று பிரித்து,
வெல்லப் பாகுபோலும் இனிமை பொருந்திய சொல் எனலே பொருந்தும்.
‘பாகமார்’ என்ற பாடம் யாண்டுளது.

     5. பொ-ரை: வெண்ணிறப் பற்களையுடைய அசுரர்களின் திரிபுரங்கள்,
ஒளி பொருந்திய நெருப்பால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர்
சிவபெருமான். மின்னுகின்ற பறவைகளை உடைய திருப்பூந்தராய் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானார் தேன்கமழும்
கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார். அப்பெருமானாரைத்
தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள்.

     கு-ரை: வெள் எயிறு உடைய-அரிய உடம்பில் வெள்ளைப் பற்கள்
மிக வெண்மையாய்த் தோன்றுகையால் வெள் எயிறு உடைய. புறவு-பன்னிரு
பெயர்களுள் ஒன்று. ஊரை எரியூட்டிய ஒருவனார். ஒளிர்-மின்னுகிற.
புள்-பறவை.