பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)17. திருவிசயமங்கை521

2981. மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
  ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட வருள்புரி விசய மங்கையே.        6

2982. இரும்பொனின் மலைவில்லின் எரிச ரத்தினால்
  வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே.       7


     6. பொ-ரை: நீலோற்ப மலர் போன்ற கண்ணுடைய உமாதேவியை
ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன். சிறந்த நெருப்புப் போன்ற
திருமேனியுடையவன். எம்மை ஆளும் அவரின் நகர் நீரும், மலரும்
கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த
திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும். பூவும், நீரும் கொண்டு
அன்புடன் வழிபடுபவர்களின் பூசையை ஏற்று இறைவன் அருள் செய்வான்
என்று கூறுவது அன்பில்லாதவர்களின் பூவையும், நீரையும் இறைவன்
ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதைப் புலப்படுத்தும். “பொக்கம் மிக்கவர்
பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே” (தி.5 ப.90 பா.9)
என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கை இங்கு நினைவுகூர்க.

     கு-ரை: மை - கருமை - கரிய நீலோற்பல மலருக்கு ஆகுபெயர்.
நீலோற்பல மலரையொக்கும். கண் உமை - கண்களையுடைய உமாதேவியார்.
வண்தழல் - சிறந்த நெருப்பை. ஒப்பு உரை மேனி-ஒப்பாக உரைக்கும்
உருவத்தையுடைய. எம் உடையவன் - எம்மை ஆளாக உடையவன்.
அப்பு-நீர். இறைஞ்சி - மெய்ப்பட வணங்கி, உண்மையான தியானத்திலிருக்க.
“மைப்பயந்த வொண்கண்” (பூம்பாவைத் திருப்பதிகம்) என்றதில் கண்ணின்
கருமைக்கு ஒப்பாகாமையால் மை அஞ்சியதாதலின் மையைப் போன்ற
கரியகண் எனலுமாம். பயன்பட்ட எனின் பொருந்தாது.

     7. பொ-ரை: பெரிய மேருமலையாகிய வில்லினால் எய்யப்பட்ட
நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடி செய்த பெரும்
வீரமுடையவன் இறைவன். வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர்
மாலையையும், தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த சடைமுடியுடைய
தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும்
திருத்தலம் ஆகும்.