பக்கம் எண் :

522திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2983. உளங்கைய இருபதோ டொருபதுங் கொடாங்
  களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துட னெரிதர வடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.    8

2984. மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
  அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.     9


     கு-ரை: இரும் பொ(ன்)னின் மலைவி(ல்)லின் - பெரிய பொன்மலை
(மேரு) வில்லினால். எரி - நெருப்பாகிய சரத்தினால் (அம்பினார்)
திரிபுரமெரித்த அம்பின் நுனிப்பாகம் தீக்கடவுளாய் இருந்தமையால் “எரி
சரம்” எனப்பட்டது. அ(ண்)ணல் -தலைவன்.

     8. பொ-ரை: தன்னுடைய வழியில் இம்மலை தடுக்கின்றது என்று மனம்
கசந்து, இருபது தோள்களும், பத்துத் தலைகளும் கொண்டதால் தான்
வலிமையுடையவன் என்று எண்ணி, எடுத்தற்கு அரிய கயிலை மலையினைப்
பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான இராவணன் தளர்ந்து உடல் நெரியும்
படி அடர்த்த தன்மையுடைய சிவபெருமான், ஒளிவீசும் ஆபரணங்களை
அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும்
திருத்தலம் ஆகும்.

     கு-ரை: உளம் கைய (இம்மலை செல்லுதற்குத் தடையாயிருந்த தென்று)
மனம் வெறுக்க. அளந்து - தன் இருபது தோளும் பத்துத் தலையும் கொண்ட
தன் வலிமையை அளந்து தெரிந்துகொண்டு. அருவரை - எடுத்தற்கரிய
கயிலைமலையை. விளங்கு இழை - (அம்மையாரால் அணியப்பெற்றதால்)
விளங்கும் இழை. (அணி)யையுடைய அம்மையார்.

     9. பொ-ரை: மண்ணினை உண்ட திருமாலும், தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர்,
குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனமும், பூவும் நீரும் கொண்டு
விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: இப்பாடலின் முற்பகுதிக்குத் திருமால் பிரமர்கள் என்பது
பொருள். அத்தன்-தலைவன்.