பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)17. திருவிசயமங்கை523

2985. கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
  நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.     10

2986. விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
  நண்ணிய புகலியுள் ஞானசம் பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.        11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: கஞ்சி உண்ணும் புத்தர்களும், கவனமாக உணவு
உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும்
கொடியனவாகும். நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார். சிவந்த
சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது
வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கவணர் - மாறுபட்ட தன்மையை யுடையவர்கள், வடசொல்.
கஞ்சியும் கவளமும் உண்பவர், முறையே சமணரும் புத்தரும் ஆவார்.

     11. பொ-ரை: விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசயமங்கை
என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில் அவதரித்த
ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத
வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர். அவர்கள் சிவகதி அடைவது
உறுதியாகும்.

     கு-ரை: ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர். சிவ
புண்ணியச் செல்வர் ஆவர். அவர்கள் சிவாநந்தப் பெரு வாழ்வு அடைவது
திண்ணம்.

ஏழு திருமுறைகளிலும் பதிகங்கள் உள்ள தலங்கள்

1. திரவாரூர்.2. திருகச்சியேகம்பம். 3. திருமறைக்காடு.
            
ஆக மூன்று தலங்கள்.