பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)30. திருஅரதைப்பெரும்பாழி605

3124. துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
  இணையிலேற் றையுகந் தேறுவ ரும்எரி
கணையினான் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     7


     கு-ரை: தற்று - இடையில்உடுத்து, "மடிதற்றுத்தான் முந்துறும்" என்பது
திருக்குறள் 1023. இரவில் நடம் ஆடுவர். தாழ்தரு - வணங்குகின்ற. துற்று
அமர்(வன) பாரிடம் - சுற்றியுள்ளவை பூதப்படை. அமர்; பகுதியே நின்று
வினைமுற்றுப் பொருளுணர்த்திற்று. "பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்"
என்ற திருக்குறளிற் (813) போல. கொடியின் மிசைப் பெற்றதை உடையவர்.
பெற்று - பெற்றம், விடை.

     7. பொ-ரை: அழகிய சுரிந்த சங்கினாலாகிய குழைகளைக் காதில்
அணிந்தும், திருவெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர் இறைவர், ஒப்பற்ற
இடபத்தை விரும்பி வாகனமாக ஏறுபவரும், அக்கினிக் கணையைச் செலுத்தி
முப்புரங்களை அழித்தவரும், கையினில் இளமான்கன்றை ஏந்தியவருமான
அச்சிவபெருமான் கோயில் கொண்டு அருளுவது திரு அரதைப்
பெரும்பாழியே ஆகும்.

     கு-ரை: அம்-அழகிய. சுரிசங்கு-சுரிந்த சங்குக் குழையை.
துணை-ஒன்றோடொன்று ஒக்க. இறுத்து-தங்கவிட்டு (காதில்அணிந்து).
அமர்-விரும்பத்தக்க. வெண்பொடி-வெள்ளிய திருநீற்றை. உகந்து-விரும்பி.
இணை இல்-நிகர் அற்ற. ஏற்றை-இடபத்தை. ஏறுவரும்-ஏறுபவரும்.
எரிகணையினால்-அக்கினியாகிய அம்பினால்; முப்புரம் அழித்தவரும்.
கையினில் மானையுடையவருமாகிய சிவபெருமான் கோயில் அரதைப்
பெரும்பாழியே. சுரி-சங்குக்கு அடைமொழி, சங்கம்-கருவியாகுபெயர்.
இறுத்தல் - தங்குதல். துணையிறுத்த "துணையற இறுத்துத் தூங்க நாற்றி"
என்னும் திருமுருகாற்றுப்படையால் அறிக.

     இறுத்தல் என்பதில் பிறவினை விகுதி குன்றி நின்றது. அமர்தல் -
விரும்பல்; "அமர்தல் மேவல்" (தொல், சொல்). உகந்து என்பதை
வெண்பொடியோடும் கூட்டுக. ஏறுவர் - வினையால் அணையும் பெயர்.
பிணை - மானின் பொதுப்பெயர். "ஆரிணம் நவ்வி குரங்கம் சாரங்கம்
மறியுழை ஆனம் பினை மானின் பெயர்" என்பது பிங்கலந்தை.2498. ஏறு(ப)
வரும் என்ற உம்மையை, செற்றவர், பிணையர் என்பவற்றோடும் கூட்டுக.