பக்கம் எண் :

640திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3184. கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
  அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கடாம் விண்ணுல காள்வரே.     4

3185. வரைதரு மகிலொடு மாமுத்த முந்திய
  திரைதரு முகலியின் கரையினிற் றேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.     5

  * * * * * * * *                          6,7


     4. பொ-ரை: கரும்பு, தேன் கட்டி, வாழைக்கனி ஆகியவற்றை
விளைவிக்கும் நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய
பிறைச்சந்திரனை நீண்ட சடையில் சூடி வீற்றிருந்தருளும் ஒப்பற்ற
காளத்திநாதரை விரும்பிப் பணிபவர்கள் விண்ணுலகை ஆள்வார்கள்.

     கு-ரை: கரும்பு தேன்கட்டி - கரும்பில் தொடுத்த இறாலின் தேனும்,
கரும்பு (சுடு) கட்டியும், அரும்பும் - விளைவிக்கும். நீர்வளம் உடைய முகலி
அரும்பும். பிறவினை விகுதி தொக்கு நின்றது.

     5. பொ-ரை: மலையில் வளரும் அகிலும் முத்துக்களும் அலைகளால்
தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், தேன் துளிக்கின்ற
நறுமண மலர்களைச் சடைமுடியில் அணிந்து விளங்கும், காளத்தியிலுள்ள
தேவாதி தேவனாகிய சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த
திருவடிகளைத் தினந்தோறும் நினைந்து போற்றி வழிபடுவீர்களாக.

     கு-ரை: வரை - மலை. அகில் - மரம். திரைதரு - அலைகளால்
தருகின்ற. முகலி - பொன் முகலியாறு. விரை - மணம். விண்ணவன் -
தேவாதி தேவனாகிய சிவபிரான். நித்தல் - நாள்தோறும்.

     6,7. * * * * * * * * *