பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்69

     தெளித்து அத்திரவியங்களை அபிடேக கலயத்தில் வார்த்துக்கொண்டு
நின்று ஆட்படுவர். கிரியை எல்லாம் அறிவோடு கூடிய வழியே பெரும்பயன்
விளைப்பதால் அவ்வொப்புமைப்பற்றி ஞானம் கிட்டுதற்கு நிமித்தமாகிய
கிரியையை ஞானம் என்றார்.

     28-11. தேவாரத்திருமறைகளையும் சித்தாந்த நூல்களையும் ஓதுங்கால்
இயன்ற அளவு உடற்சுத்தியோடு விபூதி உருத்திராக்கம் அணிந்து
ஓதவேண்டும் என்பது முறை ஆதலின் கோலத்தால் பாடுவார் என்றார்.

     31-9. யோகு அணைந்தவன் - யோகம் செய்பவன். ‘யோகியாயிருந்து
முத்தி உதவுதல் அதுவும் ஓரார்’ என்பது சிவஞான சித்தியார்.

     35-4. உள்நிலாவிய ஆவியாய் - உயிருக்குள் விளங்கும் உயிராய்
ஓங்கும் தன்மை. சிவஞானசித்தியாரில் ‘உயிர்க்கு உயிராம் ஒருவனையும்’
எனவருதல் காண்க.

     37-9. தண்டொடு அக்குவன் சூலமும் தழல் மாமழுப்படை தன்கையில்
கொண்டு ஒடுக்கிய மைந்தன் கூத்தனே.

     தண்டொடு அக்கு - யோகதண்டத்துடன் செபமாலை. இவை
யோகரூபம் குறித்தவை. ஒடுக்கிய மைந்தன் - உமாதேவியாரை இடப்பாகத்தே
சேர்த்த வலியவன். இது போகரூபம் குறித்தது. கூத்தன் - செயற்பாடு
குறித்தது. ஆக இறைவனுடைய மூன்று உருவமும் இதனுள் அமைந்தமை
காண்க.

     54-2. இவ்வடிவே அன்றி, பிருதிவி முதலான பூதங்களும்,
ஆன்மகோடிகளும், பல்கோடிப்பண்டங்களும் பிற அனைத்தும் தன்வடிவாக
நிற்பவன் என்றவாறு - சிவஞான சித்தியார்.

     61-7. ஐம்புலன் வென்றவன் - ஞானிகளுக்கு ஐம்புலன்களையும்
வெல்லுவித்தவன். ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்ற திருக்குறளுக்கும்
இப்பொருள் நேரிது.

     இவைபோலவே 62-6,8, 70-1, 81-11, 86-7, 88-4, 100-1, 102-3,4, 112-6,
119-6, 121-6, முதலியனவும் குறிப்பிடும் அருஞ்செய்திகளைக்காண்க.