பக்கம் எண் :

696திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3279. மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
  இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூரெம்
இறைவன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ.  3

3280. பல்லி லோடுகை யேந்திப் பலிதிரிந்
  தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
செல்வ மல்கிய தென்றிரு வாரூரான்
அல்ல றீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.     4


உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். தூயவர்.
திருவாரூரில் வீற்றிருந்தருளும் தீ வண்ணர். எப்பொருட்கும் விளக்கமாய்
அமைந்த பெரும்பொருள். அவர் என்னை அஞ்சற்க என்று மொழியாததன்
காரணம் யாதோ?

     கு-ரை: கருத்தனே - கருத்திலிருப்பவனே. "வாயானை மனத்தானை
மனத்துள் நின்ற கருத்தானை" (தி.6 பா.19. பா.8) என்றதுங் காண்க.
திருத்தம் - தீர்த்தம்; தூய்மை. "திருத்தமாம் பொய்கை" என்புழியுங் காண்க.
திருத்தன் - தூயவன். இனித்திருத்த சொரூபமானவன் என்றலும் ஒன்று. என்
- எதனால்.

     3. பொ-ரை: இறைவன், வேதங்களை அருளிச் செய்து
வேதப்பொருளாகவும் விளங்குபவன். பெரிய தவத்தன். பகையசுரர்களின்
முப்புரங்களை நொடிப்பொழுதில் எரியூட்டியவன். சிறகுகளையுடைய
வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும்
இறைவன் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வானோ!

     கு-ரை: இறையில் - சிறு தீப்பொறியால். மாத்திரையில் - ஒரு
நொடிப்போதில். இறை - சிறியது, தீப்பொறிக்கு அளவையாகுபெயர்.
இறையில்; இல் - வேற்றுமை உருபுமயக்கம். முனிவன், மருவார்புரம் -
பகைவரது புரங்கள் (எரி ஊட்டினான்).

     4. பொ-ரை: இறைவர் பிரமனின் பல் இல்லாத மண்டையோட்டை
ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர். இரவில் சுடுகாட்டில் நடனம் புரிபவர். செல்வச்
செழிப்பு மிக்க அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என்
துன்பத்தைத் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ!