பக்கம் எண் :

722திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3329. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
  வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.           10

3330. நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
  சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.           11


திருமாலும். நேடிய - தேடிய. யாதும் - பற்றுக்கோடு எதுவும். காண்பு -
காண்டல். அரிதாகி - இல்லையாகி. அரிது - இல்லை என்னும் பொருளில்
இங்கு வந்தது. ‘மனக்கவலை மாற்றலரிது’ என்புழிப்போல் ஆகும்.

     10. பொ-ரை: தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை
கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய
‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை என்னும்
ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும்,
கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும்
வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர்.

     கு-ரை: கஞ்சி மண்டையர் - கஞ்சி குடிக்கும் பாத்திரத்தைக்
கைக்கொண்டவர். மண்டை - ஒருவகைப் பாத்திரம் (புத்தர் ). கையில்
உண்கையர்கள் - கையே பாத்திரமாக உண்ணுகின்ற கீழோர். (சமணர்)
மிண்டர் - மண்டையரும் கையருமாகிய மிண்டர் என்க. விஞ்சை -
அறிவு. வித்தை - விச்சை எனப் போலியாய், அது மெலித்தல் விகாரம்
பெற்று விஞ்சை என்றாயிற்று. நஞ்சு - விடக்கறை. உள் கண்டன் - உள்ள
கண்டத்தையுடையவன்.

     11. பொ-ரை: நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின்
திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த
தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச்
சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.

     கு-ரை: சந்தையால் - இசையோடு, பாடிய என ஒரு சொல் வருவிக்க.