பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)50. திருத் தண்டலை நீணெறி727

ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் நிலைத்த
செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப்பிணி நீங்கப் பெற்றவராவர்.

     கு-ரை: நீற்றர் - திருநீறணிந்த அடியார்கள் வாழும் தண்டலை
நீணெறி. தோற்றம் - (விளங்கித்) தோன்றுகின்ற. (மேன்மையர்) தோணிபுரம்
என்பதற்கும் இவ்வாறே உரைக்க. மாற்றில் - மாறுதல் இல்லாத (செல்வர்) -
வந்து அழிந்து மாறும் பிற செல்வங்கள் அல்ல. மாற்று - முதனிலை திரிந்த
தொழிற்பெயர். மறப்பர் பிறப்பை - இனிப்பிறவார் என்பது கருத்து.

திருஞானசம்பந்தர் புராணம்

மற்றவ்வூர் தொழுதேத்தி மகிழ்ந்து பாடி
     மாலயனுக் கரிய பிரான் மருவுந் தானம்
பற்பலவுஞ் சென்றுபணிந் தேத்திப் பாடிப்
     பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர் வாழ் தண்டலைநீள் நெறியுள் ளிட்ட
     கனகமதில் திருக்களருங் கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவுஞ் சென்று போற்றித்
     திருமறைக்காட் டதன்மருங்கு சேர்ந்தார் அன்றே

                                 -சேக்கிழார்.

சிதம்பரச் செய்யுட் கோவை

பரசிருக்குந் தமிழ்மூவர் பாட்டிருக்குந் திருமன்றிற்
     பரசொன் றேந்தி
அரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யா
     ரென் செய்வார்
முரசிருக்கும் படைநமனார் முன்னாகு மந்நாளே.

                                 -குமரகுருபரர்.