பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்73

     ஆரியனாம் ஆசான்வந்து அருளால் தோன்ற
          அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்;

என்பது சிவஞான சித்தி வாக்கியம். அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்.
ஆயின், அந்த ஞானத்தின் முதலான ஞேயம் அந்த ஆன்மாவில்
தோன்றாதேல், ஆன்மா, சிவத்தை அறிவது எவ்வாறு? ஞானமும் ஞேயமும்
தோன்றும் இடம் ஆன்மாவே ஆகும். அப்பொழுது அடிஞானத்தால்
நிறைந்த ஆன்மா முடியாகிய ஞேயமாய் நிற்கும் பேரின்பமாம்.

     “முடியெனும் அதுவும் பொருளெனும் அதுவும்
          மொழிந்திடின் சுகம்”

     “துன்னும் அவனே தானாக அடையின் முடியாம்”

     “உரையிறந்த சுகமதுவே முடியாகும்”

     “அடியெனும் அதுவும் அருளெனும் அதுவும
          அறிந்திடின் நிர்க்குண நிறைவு”

     சிவாநந்தாநுபூதி பெற்றவர்க்குச் சிவபிரானும், திருவடியும், திருமுகமும்,
திருமுடியும், பிறவும் ஆகிய எல்லாம் இன்பமேயாய்த் திகழும் இன்பம்
அன்றி வேறு இல்லை.

     ‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’ என்னும் உயர்வுக்கு உரிய
பெருநிலைத் தாண்டவம் அடியார்க்குத்தான் தெரியும்.

“ஆநந்த மேசெவி அம்புயத்
     தாளிணை அங்கைகளும்
ஆநந்தமே திருக்கண்ணும் செவ்வாய்
     அருள் மேனியெல்லாம்
ஆநந்தமே அருட்சிற்றம் பலவர்
     அருட் பொருளும்
ஆநந்தமே அவன் தில்லையும்
     காழியும் ஆநந்தமே”

                    - சிற்றம்பல நாடிகள்  

    அத்தகு முடிந்த முடிபாகிய அடிமுடிகளை அறிந்து அநுபவித்து வரும்
பேரின்ப வாழ்க்கையரே அடியார் ஆவார்.