பக்கம் எண் :

74ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

அடியார் வேறு ஆண்டவன் வேறு அல்லர். 1 மண், 2 நீர், 3தீ, 4கால்,
5 விண், 6 செங்கதிர், 7 வெண்கதிர், 8 வேள்வித் தலைவன் என்னும் எட்டும் ஆண்டவனுடைய வடிவங்கள் ஆகும். அவற்றுள், வேள்வித்தலைவன்
சித்துருவன். ஏனை ஏழும் அசித்துருவம். அசித்துக்கும் சித்துக்கும்
ஆண்டவன் வாழ்ச்சியாலும் வேறுபாடுண்டு. அவன் அசித்துக்களைத்
தொழிற்படுத்தும் அளவாய் அவற்றிற்படுவன். அச் சித்துக்கோ அநந்நியமாகி
அருளி வருவன். எல்லா உயிர்களும் சித்துக்களே ஆயினும், வேள்விக்கோன்
ஆண்டவனை மறவாதவனாதலின், அவன் அம் முதல்வனுக்கு என்றும்
நீங்காது வாழும் இடமாயினான்.

     “தீவளி விசும்பு நிலன்நீர் ஐந்தும்
     ஞாயிறும் திங்களும் அறனும்.” -
பரிபாடல். 3,4-5

     என்பதற்கு, “அவை தீ, வளி, விசும்பு, நிலம், நீர் என்னும் பூதங்கள்
ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும் என இவை” என்றுள்ள
உரையை இங்குக் கருதுக. வேள்வி முதல்வன் என்றது, அவரவர்
சமயத்திற்குத் தக வேறுபடும். சைவ சமயத்திற்கு வேள்வி முதல்வன்
சிவாபூஜா துரந்தரன், சிவஞானி ஆவன். அவனே நடமாடுங்கோயில், சிவனை
வழிபடாத மாக்களை நடமாடுங் கோயில் என்பது நரகத்தை அடைவிக்கும்
நாச வார்த்தையே ஆகும். ‘அடியார்க்கே நடமாடக் கோயில்’ என்னும்
பெயர் உரியது. அதனை, நம் ஞானசம்பந்த பரமாசாரியர்,

     “காதலால் நினைவார்தம் அகத்தன்” (தி.3. ப.373 பா.3)

     “நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே” (தி.1.ப.119 பா.4)

     “கைதொழுது ஏத்தும் அடியார்கள் ஆகம்

     அடிவைத்தபெருமான்” (தி.1. ப.2 பா.9)

     “போகமும் இன்பமும் ஆகிப் போற்றி என்பாரவர் தங்கள்

     ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர்”(தி.2. ப.205 பா.5)

     என்பவற்றால், அடியார் அகத்திலும் ஆகத்திலும் ஆண்டவன்
பிரியாமல் உறையும் உண்மையை உணர்த்தியருளினார்.