பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்75

     “கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமான்” (தி.3. ப.105 பா.3).
“பாவிகள் சொல்லைப் பயின்றறியாப் பழந் தொண்டர் உள்ளுருக ஆவியுள்
நின்று அருள் செய்ய வல்ல அழகர்” (தி.3. ப.103 பா.10). என்றவற்றை உற்று
உற்று நோக்கி உணர்ந்தால் திருஞானசம்பந்த சுவாமிகள். நாம் உய்யும்
வழியை வெளிப்படையாக உபதேசித்தருளும் உண்மை இதுவே என்று
நமக்கே இனிது புலப்படும்.

     ‘உச்சிமேல் உறைபவர்’, ‘உளங்கொள்வார் உச்சியார்’ ‘எங்கள் உச்சி
உறையும் இறையார்’ என்பவற்றால், அகத்தும் புறத்தும் நின்று அடியவர்க்கு
அருளும் மெய்ம்மை விளங்கும். சீவன்முத்தி எய்திய அடியார்க்குப் பிராரத்த
தேகம் விளங்கும் அளவும், அதில் அம்மையப்பர் வீற்றிருப்பர் என்பதை,
‘ஊன் அமரும் உடலுள் இருந்த உமை பங்கன்’் (தி.3ப.12பா.4) ‘அகன்
அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல்
உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர்’ (தி.1. ப.132 பா.6)
‘உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்’ (தி.2. ப.109 பா.5) “எண் ஒன்றி நினைந்தவர்
தம்பால் உள் நின்று மகிழ்ந்தவன்” (தி.1. ப.37 பா.2) “பாடி ஆடிப் பரவுவார்
உள்ளத்து ஆடி” (தி.1. ப.28 பா.7) என்பவற்றால் விளக்கியருளினார்.

     அன்பு அகத்தில் அமர்ந்து பெருகுதல் வேண்டும். வேட்கை, வெகுளி,
இவறுதல், மயக்கம், செருக்கு, பகை என்னும் ஆறும் அழிதல்வேண்டும்.
புலனடக்கம் வேண்டும். சிவஞானம் புகுதலும் அதை விரும்புதலும்
வேண்டும், உருக்கம் வேண்டும். ஒன்றியிருந்து நினைதல் வேண்டும். பாடவும்
ஆடவும் பரவவும் வேண்டும். அவ்வளவும் உடைய அடியார்க்கே அம்முழு
முதல்வன், உள்ளிருந்து, சுடர்வீசி, மகிழ்ந்து ஆடிப் பேரின்பம் விளைப்பான்
என்று பயன் விரித்தருளினார்.

     அடியார் சிந்தையே திருக்கோயில் என்று திருமுறைகள் விளம்புவது
பலர் அறிந்த உண்மை. திருஞானசம்பந்தப் பெருமானார்,

     “இறைஞ்சுவார் சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வான்”
                                      (தி.2. ப.64 பா.4)
     “நினைப்பவர் மனத்துளான்”          (தி.1. ப.76 பா.7)
என்றருளினார்.