பக்கம் எண் :

76ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

     “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்”
                              (தி.5. ப.76 பா.1)

என்பது அப்பர் அருள்மொழி.

     அம்மனம் மூச்சுடன் வெளிச்சென்று உலகில் அலைந்து இடர்ப்படாதவாறு, அடக்கி, இறைவனது திருவடிக்கே இடமாக்குவது
அடியார் இயல்பு. ஏற்றான் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்கும்
இயல்புடைய அடியார் எல்லாரும் அவனுக்கே நெஞ்சத்தை இடமாக்குவர்
என்பது சிறிதும் ஐயம் விளைக்காத வாய்மை. அவர்க்கு மூச்சும் பேச்சும்
பிறவும் சிவமாகவே விளையும். அதனால், அவர்க்குப் புலன் வழிச் சென்று
உலகின்பம் நுகரும் பொறியுணர்வு இல்லை. அதனால், அவர் உளத்திலும்
உணர்விலும் சிவபெருமான் வீற்றிருந்து ஞான நடம் புரிகின்றான். அதனை,

“சினமலி அறு பகைமிகுபொறி
     சிதைதருவகை வளிநிறுவிய
மனன்உணர்வொடு மலர்மிசைஎழு
     தருபொருள்நிய தமும்உணர்பவர்
தனதெழில்உரு வதுகொடுஅடை
     தருபரன்உறை வதுநகர்மதிள்
கனமருவிய சிவபுரம்நினை
     பவர்கலைமகள் தரநிகழ்வரே”

                         (தி.1. ப.21 பா.5)

என்று, கனிச்சீர்நந்நான்கு கொண்ட நான்கடித் திருப்பாடலால் தெளியச்
செய்தருளினார் சிரபுரக்கோமகனார். இதன் முற்பகுதியில், அறுபகையும்,
அப்பகையறாத பொறியின் இயல்பும் அவற்றின் சிதைவும், அச்சிதைவைத்
தவிர்க்கும் மூச்சடக்கமும், அம்மூச்சடக்கத்தால்எய்தும் மனவடக்கமும்,
அம்மன வடக்கத்தால் வளரும் ஞானமும், அந்த ஞானத்திருவுருவொடு
அவ்விதய கமலத்தில் இறைவன் எழுந்தருளலும், அங்ஙனம் எழுந்தருளும்
செம்பொருளையே நியதமாக உணர்கின்ற உணர்வும், அவ்வுணர்வே
அடிமைத்திறம் ஆதலும், அவ்வடிமைத்திறம் உடையவரே அடியவராதலும்
சுருங்கச்சொல்லி விளங்கவைத்தருளிய உண்மை உணர்வார்க்குப் புலனாகாது
ஒழியாது.

     பிற்பகுதியில், “அடியாரிடத்தில் ஆண்டவனும் அவ்வடியார்
திருக்கோலமாகவே நின்று, அவரை வழிபடுவார்க்குக் காட்சி
கொடுத்தருள்வான். அருளினும், அவ்வடியார் திருவுள்ளத்தில்