|
இருக்கும் சிவனுருவம்
அருளாகிய எழிலுருவமே ஆகும். அதுதான்
அவனது எழிலுரு. அதைக்கொண்டே அவ்வுள்ளத்தை அடைவான்.
அத்தகைய பராபரன் எழுந்தருளி விளங்கும் தலம் சிவபுரம். அதை
நினைந்து போற்றுவார் சகலகலாவல்லியின் திருவருட்செல்வம் உலகு புகழ
நிகழப் பெறுவர் என்னும் வாய்மை உணர்த்தப்பெற்றுள்ளது.
சிவபெருமானே
தாயினும் நல்ல தலைவன் என்று அம்முழு
முதலடியைப் போற்றிசைப்பார்கள். அப்போற்றுக்களை இசைக்கும் வாயினும்
அத்திருவடியை அடியார்கள் நினைந்து மறவாமலிருக்கும் மனத்தினும்
அகலாமல் மருவியிருக்கும் மாண்பு அக்கடவுளுக்கு இயல்பாக உண்டு.
தாயினும்
நல்ல தலைவர் என்று அடியார்
தம்அடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா
மாண்பினர் காண்பல வேடர்
(தி.3.
ப.123 பா.5) |
இதில்,
அடியவரடிகளைப் போற்றிசைப்பாருடைய வாயிலும் மனத்திலும்
ஆண்டவன் குடிகொண்டிருந்தருள்வான் என்ற கருத்தும் கொள்ளுமாறு
தொடர் அமைந்திருப்பது உணரத்தக்கது.
அடியவர்கள்
போற்றல் செய்யும்பொழுது, ஆண்டவன் அதுசெய்து
வரும் வாயில் விளங்குகின்றான் என்பது அநுபவம் மிக்கவர்க்கே புலனாகும்.
அன்பால் உருகும் அடியவர்க்கு ஆண்டவன் அன்பனாகின்றான்.
சொல்நவிலும்
மாமறையான் தோத்திரம்செய்
வாயின்உளான் (தி.1. ப.62 பா.7)
அன்போடு
உருகும் அடியார்க்கு அன்பர் (தி.2. ப.63 பா.5)
அடியார்க்கு
இலக்கணம் பல உள்ளன. அவற்றுள் தூய வெண்ணீற்றை
மெய்யெலாம் சண்ணித்தல், அத் திருநீறு ஒளி வீச, கூட்டமாகக் கலந்து,
திருவுலாவுடையார் பின்னர்ச் செல்லுதல், இசைபாடிச் பரவுதல், சிவபூசை
செய்தல், மாலை தொடுத்தல், மாலையாற்புனைதல், தோளும் கையும்
குளிரத்தொழுதல், அக்கு மாலைகொண்டு அங்கையில் எண்ணுதல்,
மறையோதுதல், உள்ளுருகுதல், சீலம் உடைமை, பற்றறுத்தல், அன்புருவாதல்,
திருவடியே தொழுதல், திருவடி நினைவன்றி வேறு நினைவுறாமை,
சிவதலங்களை வழி படுதல்,
|