பக்கம் எண் :

806திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3447. மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய
       ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந்
     தேவர்பிரான்
பாடிய நான்மறையான் பலிக் கென்றுபல்
     வீதிதொறும்
வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம்
     வக்கரையே.                      10

3448. தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை
       யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை
     வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம்
     பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை
     பற்றறுமே.                        11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: காவியாடை போர்த்திய புத்தர்களும், அசோக மரத்தை
வணங்கும் சமணர்களும், தேடுகின்ற தேவர்களால் வணங்கப் படுகின்ற
தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான் நான்மறைகளை
அருளிச்செய்து, பல வீதிகள்தோறும் சென்று உலர்ந்த பிரம கபாலத்தை
ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம்
திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: பிண்டியர் - அசோக மரத்திற் பற்று உடையவர்கள்.

     11. பொ-ரை: குளிர்ந்த கங்கையும், பாம்பும் சடைமுடியில் அணிந்த
அழகனான சிவபெருமான், உறையும் சந்திரனைத் தொடும் படி ஓங்கி
வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும்
திருத்தலத்தைப் போற்றி, சண்பை நகர் எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க
அவதரித்த தலைவனான தமிழ் ஞான சம்பந்தன், அருளிய பண்ணோடு
கூடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப்
பெறுவர்.

     கு-ரை: பண்புனை பாடல் - பண்ணாற் புனைந்து பாடிய பாடல்.