பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்83

சுவாமிகள் அருளிய திருப்பாடலில், “நாரூர் நறுமலர்நாதன் அடித்தொண்டன்
நம்பிநந்தி நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே” (தி.4
ப.102.பா.2) என்று உள்ளது. அதனால், நமி என்பது நம்பி என்பதன் மரூஉ
எனல் உறுதியாயிற்று.

     அவரே, “அடித் தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர்
அமுதினுக்கே” (தி.4 ப.102.பா.2) என்றும், “ஊனம்இல்லா அடிகளும்
ஆரூரகத்தினர் ஆயினும், அம்தவளப்பொடி கொண்டு அணிவார்க்கு இருள்
ஒக்கும் நந்தி புறப்படிலே” (தி.4 ப.102.பா.6) என்றும் அருளியவற்றால்,
‘நந்தி’ என்று வழங்கும் அதுபற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

     அதற்கு முன்மொழியான ‘நமி’ என்பது யாவது? அதன் தொல்லுருவம்
யாது? இவ்வினாக்கள் எழுமுன் இறுத்த விடையாக, அவர் திருவாயினின்றே
‘நம்பிநந்தி’ என்று தோன்றியிருக்கின்றது. ‘தொண்டர்க்கு ஆணியெனும்பேறு
திருநாவுக்கரசு விளம்பப்பெற்ற பெருமையினார்’ என்று குறித்தருளிய
அருள்மொழித்தேவர், ‘நம்பிநந்தியடிகள்’ என்னாது, ‘நமிநந்தி யடிகள்’
என்றதன் காரணம் தொகையிலும் வகையிலும் ‘நமிநந்தி’ என்று இருப்பதற்குச்
சிறிதும் வேறுபடாதவாறு பெயரைக் குறிப்பதுதான், அறிவார்க்கு மயக்கம்
விளைக்காது என்று திருவுளங் கொண்டதாகும்.

     சேக்கிழார் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார் நம்பி
மூவரும் ‘நமிநந்தி’ என்று குறித்தமையால், நம்பிநந்தி திருநாவுக்கரசர்
குறித்தது வழுவாய்விடுமோ? அவரது திருப்பாடலில், ‘நமிநந்தி’ என்று
இருந்ததை எவரோ ‘நம்பிநந்தி’ என்று திருத்தியிருக்காலம் எனில், அஃது
செய்யுளியலறியார் கூறுதலும், திருத்தியவர்க்குப் பேரறிவைத் தோற்றதலும்
ஆகும். ‘வேலைமெனக் கெட்டு’ என்பது போல ‘நம்பி நமிநந்தி’ எனத்
திருத்தொண்டத் தொகையில் அமைந்திருப்பது வியக்கத்தக்கது.

     (வினைக்கெட்டு-வெனைக்கெட்டு - வெனக்கெட்டு -
மெனக்கெட்டு-வேலைமெனக் கெட்டு என மருவியவாறும் மரூஉ
மொழிப்பொருள் தெரிய அப்பொருளுடையதொரு சொல் முன் நின்றவாறும்
உணர்க. நமக்கு நம்பி என்ற அதன் தொல்லுருவமே முன்நின்றது.
அரைஞாண்கயிறு எனப் பின் நிற்றலும் அறிக. வேலைமினுக்கிட்டு என்று
ஒரு வெண்பாவில் உள்ளது. அது பட்டினத்தார் பாடியதென வழங்குகின்றது).