3591. |
மந்தமலி சோலைமழ பாடிநகர் |
|
நீடுபழை
யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர
மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி
ஞானசம் பந்தனணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல
தொண்டர்வினை நிற்பதிலவே. 11 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி
என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும்
திருத்தலத்தில், தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும், வீடும் அருளவல்ல
நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்
படர்ந்த சிறுசடைகளையுடைய சிவபெருமான். அப்பெருமானைப் போற்றி
எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற
திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய
இப்பதிகத்தைக் கேட்டற்கும், உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல
தொண்டர்களின் வினைகள் நீங்கும்.
கு-ரை:
மந்தம் - தென்றல் காற்று. மலி - மிகுந்துலாவும்.
(சோலைகளையுடைய) மழபாடிநகர் - மழபாடி என்னும் நகரப் பகுதியைத்
தன்னுட் கொண்ட. நீடு - நெடிய (பழையாறை என்னும் தலத்தில்) பந்தம்
உயர் வீடும் - பந்தமும் உயர்ந்த முத்தியும். நல - அடைந்தவர்க்கு
அளிப்பதில் நல்லதாகிய. (பட்டீச்சரம் மேவிய.) படர்புன் சடையனை -
படர்ந்த சிறு சடைகளை உடையவனாகிய சிவபெருமானை. அந்தண் -
அழகிய ஜீவ காருண்ணியம் உடைய (மறையோர்). இனிதுவாழ் -
இனிமையாக வாழ்கின்ற. (புகலி, ஞானசம்பந்தன்) அணியார் - அணிகளோடு
கூடிய. செந்தமிழ்கள் - செந்தமிழ்ப் பதிகங்களை. கொண்டு - பிறவிக்
கடல்கடக்கும் புணையாகக் கொண்டு. இனிது செப்பவல தொண்டர் -
கேட்டற்கும் உணர்தற்கும் இனியதாகச் சொல்லவல்ல தொண்டர்களின்.
வினை - வினைகள். நிற்பது இல - நில்லாவாம்.
|