பக்கம் எண் :

240
 

நகரங்களிலிருந்து பேருந்துகள் உள்ளன.

இறைவரின் திருப்பெயர் காயாரோகணேசுவரர். இறைவியாரின் திருப்பெயர் நீலாயதாட்சி.

தீர்த்தம் தேவதீர்த்தம். புண்டரீக தீர்த்தம், இவை முறையே கோயிலுக்குத் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்றன.

அதிபத்தநாயனார் திருவவதாரஞ் செய்த திருப்பதி. சுந்தரமூர்த்தி நாயனார் காற்றனைய வேகத்தையுடைய குதிரை ஒளியுள்ள முத்துமாலை சிறந்தபட்டு முதலானவைகளை வேண்டிப் பெற்றார். விடங்கர் தலங்கள் ஏழனுள் ஒன்று.

திருக்கோயிலில் முதலில் இருக்கும் விநாயகருக்கு நாகாபரண விநாயகர் என்று பெயர். உள்ளேயிருக்கும் பிள்ளையாருக்கு மாவடிப் பிள்ளையார் எனப்பெயர். இத்தலத்து அம்மன் மிகச்சிறப்புடையவர். இத்தலத்தைப்பற்றி “காஞ்சி காமாட்சி மதுரைமீனாட்சி காசி விசாலாட்சி நாகை நீலாயதாட்சி”என்னும் பழமொழி வழங்குகின்றது.

இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் நான்கு சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்களிருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனார் பதிகத்தின் இறுதிப்பாட்டை வெள்ளிப்பாடல் என்பர். வெள்ளிப்பாடல் என்பது பின்னால் யாரோ ஒருவரால் எழுதிச் சேர்க்கப்பெற்றதாகும்.

அவர்கள் அங்ஙனங் கூறுதற்குக் காரணம் ஐந்தாம் திருப்பாடலில் “சுந்தரனே கந்தமுதலாடை யாபரணம் பண்டாரத்தேயெனக்குப் பணித்தருள வேண்டும்”என்றிருப்பதாலும் 11-ஆம் திருப்பாட்டில் “ஒளிமுத்தம் பூணாரமொண்பட்டும் பூவுங் கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும்” என்றிருப்பதாலும் முதலில் கூறியவற்றுள் சில இரண்டாவது கூறியவற்றுள் காணப்படுதலால் கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படுத்தி இதைவெள்ளிப்பாட்டு என்பர்.

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தலபுராணம் எழுதியுள்ளார்கள். அது அச்சில் வெளிவந்துள்ளது. அது புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படும் பெருஞ்சிறப்பு வாய்ந்தது.