பக்கம் எண் :

241
 

“கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்” என்று ஞானசம்பந்தர் கூறியிருத்தலாலும் பாக்கு விளையாடிக்கொண்டிருந்த பாலகர்களை நோக்கிப் பசியினால் காளமேகப்புலவர் ‘சோறு எங்கு விக்கும்’ என்று கேட்டதற்கு அப்பாலகர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினார்கள். (விற்கும் - என்பதைப் பேச்சுவழக்கில் விக்கும் எனக் கூறுதலுண்டு). உடனே புலவர் கோபித்து அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு “பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு”என்பது வரை சுவரில் எழுதி விட்டு, பசி தீர்ந்தபிறகு எஞ்சிய பகுதியைப் பாடி முடிவு செய்வதாக வைத்துவிட்டுப் பசியாற்றிக் கொண்டு அவ்விடம் வந்தபொழுது அவர் எழுதியதற்குமேல் “நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை”என்று அவ்விளஞ்சிறார் எழுதியதைப் பார்த்து மதிமயங்கிச் சென்றதாகத் தனிப்பாடல் ஒன்று இருக்கின்றது. இவைகளால் இவ்வூர் மக்களின் கல்வித்திறம் புலப்படும். இவ்வூரில் இருந்த காத்தான் சத்திரத்தைப் பற்றிய காளமேகப் புலவர் பாடலொன்றும் உண்டு.

இந்த ஊர் ஒரு துறைமுகம் வாணிகத்தலம். கீழைத்தஞ்சையின் தலைநகரம். இவ்வூரில் மங்களாசாசனம் பெற்ற திருமால் கோயில் சௌந்தரராஜப்பெருமாள் என்ற பெயரால் விளங்குகிறது. மேலும் மேலைக்கயா என்ற சட்டநாதர் கோயில் ஒன்று இருக்கிறது. மற்றும் காவல் தெய்வமாகிய கோதண்ட ஐயனார் கோயில் அமர்ந்தீசர்கோயில் மலைச்சுரம் கோயில் (கயிலாயநாதர்) (இதுஒரு கட்டு மலை) குமரர் கோயில், நடுவண் நாதர் கோயில் அழகியநாதர் கோயில் முதலிய பல கோயில்கள் இருக்கின்றன.

திருக்கோயில் 586-250 அடிகள் கொண்டது. இராயகோபுரம் முற்றுப்பெறவில்லை. உட்கோபுரம் 3 அடுக்குக் கொண்ட சோழன் கோபுரம். மடைப்பள்ளிக்கெதிரில் அதிபத்தர் திருவுருவம் உள்ளது. மாமரம் தலமரம். அதனடியில் மாவடிப்பிள்ளையார் இருக்கிறார். இராசதானி மண்டபத்தில் தியாகராசர் இருக்கிறார். சுந்தரவிடங்கர் சுவாமி பெயர் காரோணர் என்பது காயாரோகணர் என்பதன் மரூஉ.

புண்டரீகரிஷியை சரீரத்தோடு ஏற்றுக்கொண்டதனால் காயாரோகணர் என்று வந்ததாகப் புராணம் கூறும். நீலாயதாட்சி என்ற வடமொழிப்பெயர் கருந்தடங் கண்ணி எனத் தமிழில் வழங்கும். இது சக்தி பீடங்கள் அறுபத்து நான்கில்ஒன்று. மாடங்களில் சிற்பவேலை அழகாக இருக்கிறது. இவ்வூர்த்தேர் கண்ணாடி ரதம் அல்லது பீங்கான்ரதம் என வழங்கும்.