பக்கம் எண் :

243
 

தான நிகழ்ச்சிகளும் குறிக்கப்பெறுகின்றன. செம்பியன் ஈக்காட்டு வேளானான பரிசைகிழான் மறவன்நக்கன் என்பவன் 13 கழஞ்சு பொன்னைக் கோயில் விளக்கிற்காகக் கொடுத்தான்1. கூத்தன் அருள்மொழியான வானவன் பேரரையன் நிலத்தை 25 கழஞ்சு பொன்னுக்கு நங்கை வரகுணபெருமானார் வாங்கி விளக்கிற்காக வைத்தாள்2. சாமர கேசரி தெரிஞ்ச கைக்கோளர் விக்ரமசிங்க தெரிஞ்ச கைக்கோளர் இருவராலும் பைங்காநாட்டுக் கீழப்பிலாறு கிராமத்தில் நிலம் அளிக்கப் பெற்றது. முற்கூறிய சாமரகேசரி தெரிஞ்ச கைக்கோளருள் ஒருவனான மல்லன் ஆரியனால் நிவந்தம் விடப்பெற்றது. கோயில் காரியத் தலைவனான காமக்கோடநல்லூர் ஆயனால் இரு பொன்பட்டங்கள் கடவுளுக்குக் கொடுக்கப்பெற்றன3. சோழப் பெருமானடிகளுடைய காமக் கிழத்தியான நங்கை கூத்தப்பெருமானார் 30 கழஞ்சு பொன்னை விளக்குக்காக வைத்தார். அதனைத் திருநெய்த்தானச் சபையார் சுவாமிக்கு ஸ்நபன மண்டபங் கட்டப் பயன்படுத்தி விட்டனர். அதற்குப் பதிலாகக் கோயில் நிலங்கள் சிலவற்றை ஏற்பாடு செய்தனர். வளவர்கோன் பேரரையன் என்பவனும் செம்பியன் தமிழவேளான் விக்கணன் மனைவி கடம்பமா தேவியும் தென்னவன் பிரதிமாராசனான கட்டி ஒற்றியூரான் பராந்தகனும் இளங்கோவேண்மான் மனைவியான வரகுணப்பெருமானாரும் விளக்கிற்காகப் பொன்னும் நிலமும் அளித்தனர். முண்டங்குடி உடையானான கண்ணங்குடி நாராயணன் நைவேத்யத்திற்கு நெல்லளித்தான். இது அளித்தகாலம் பராந்தகன் I காலம். மேளக்காரன், தேவதாசி, வாணிகன் இவர்கள் தருமமும் விளங்கின என்பதை மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன 4. கோப்பரகேசரியான பராந்தகன் Iக்கு மாமியார் முள்ளூர் நங்கையென்று தெரிகிறது.5

39. திருப்பயற்றூர்

இத் தலம் காவிரியின் தென்கரையில் நாகை மாவட்டத்தில் நன்னிலம் கூற்றத்தில் மயிலாடுதுறை - காரைக்குடி புகைவண்டி வழியில் திருவாரூருக்கு முன் உள்ள விற்குடிப் புகைவண்டி நிலையத்தில் இருந்து கிழக்கே 5. கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.


1. 276 of 1911

2. 277 of 1911

3. 283 of 1911

4. 22 33 36 of 1895

5. 45 of 1895