புண்ணியத்தலம், பூலோக கயிலாயம், ஆதலின் அதன்நான்கு வீதிகளிலும் தன் திருமேனி சமண சமயம்சார்ந்திருந்த அருவருப்பு நீங்க வேண்டும் என்று கருதி அங்கப்பிரதட்சிணம் செய்கின்றார். திருத்தூங்கானை மாடத்தில்; “பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்...., என் ஆவிகாப்பதற்கு இச்சையுண்டேல், மின்னாரும் மூவிலைச் சூலம் என்மேல் பொறி” என்று வேண்டுகின்றார். திருச்சத்திமுற்றத்தில் மேலும், “பூவார் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை” என்று வேண்டுகின்றார். இறைவன் “நல்லூருக்கு வா” என்று அழைக்க அங்குச் சென்றபோது திருவடி சூட்டப்பெறுகிறார். சமண்விட்டுச் சைவம் சார்ந்தவுடனேயே திருவதிகையில் ஏழைத் திருத்தாண்டகம் என்ற ஒன்றைப் பாடுகின்றார். ஏழை என்பது இங்கு அறிவின்மையைக் குறித்தது. அதில் சமணத்தில் இருந்தபோது சிவபெருமானை இகழ்ந்த குறிப்புக்களைப் பாடியுள்ளார். அத்திருத்தாண்டகப் பதிகத்தின் முதற்பாடல் “வெறிவிரவு கூவிளம்” என்பது. ஒவ்வொரு பாடல் இறுதியிலும் “ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே” என்று இங்ஙனம் சமணச் சார்பினை எண்ணி எண்ணி இரங்கி வருந்தியவர், அதற்குப் பரிகாரமாக அங்கப்பிரதட்சிணம் முதலிய பலவற்றையும் செய்துள்ளார். இறைவன் திருநல்லூரில் திருவடி சூட்டிய பிறகுதான் ஓராற்றான்மன அமைதியுறுகிறார். இவற்றாலெல்லாம் அப்பர் தூயவாழ்வு துலங்குவதைக் காணலாம். அகச் சான்று: இவர் வாழ்வில் நிகழ்ந்தஅற்புதங்களுக்கு அகச்சான்றுகள் பல உள்ளன. “கல்துணைப்பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நல்துணையாவது நமச்சிவாயவே” (தி.4 ப.11 பா.1) என்று ஓதுகிறார். இப்பாடலைப் படிப்பவர்களில் சிலர், இப்பாடல் கல்லோடு கட்டிக்கடலில் போட்டபிறகு பாடியது அன்று என்றும், எனவே இதுகொண்டு வரலாற்றினை நிர்ணயம் செய்யமுடியாது என்றும் கூறுகின்றனர். இப்பாடல் அப்பர் பெருமானைக் கல்லோடு கட்டிப்போடுவதற்கு முன்பே அதனை உணர்ந்து, பாடியது போலத்தான் இருக்கிறது. ஆனால் அப்பெருமான்
|