கலிப்பகையாரைச் சேனைத் தலைவராக்கிப் படைகளுடன் வடபுலம் செல்ல விடுத்தனன். நீண்டநாள்போர் நடந்தது. இவ்வாறு கலிப்பகையார் போரில்ஈடுபட்டிருக்கும் காலத்தில் புகழனார் விண்ணுலகு அடைந்தார். கற்புநெறி வழுவாத அவர் தம் மனைவியாரும் சுற்றமொடு மக்களையும் துகளாகவே நீத்துக் கணவனாருடன் சென்றார். பெற்றோரை இழந்த திலகவதியாரும் மருணீக்கியாரும் ஆற்றொணாத் துயரில் அழுந்தினர். இந்நிலையில், போர்மேற் சென்ற கலிப்பகையாரும் போர்க்களத்தில் பூத உடல் நீத்துப் புகழுடம்பெய்தினார். இச்செய்தியைக் கேட்டுத் திலகவதியார் திடுக்கிட்டார். ‘என் தந்தையும் தாயும் என்னை அவர்க்குக் கொடுக்க இசைந்தார்கள். அந்த வகையால் அவர்க்கே நான் உரியவள்; ஆகையால் இந்த உயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன்’ என்று கூறி உயிர்விடத் துணிந்தார். மருணீக்கியார் தமக்கையின் திருவடிகளில்வீழ்ந்து வணங்கிப் புலம்பினார். ‘தந்தையாரை இழந்தபின் தங்களை வணங்கப் பெறுதலால் யான் இதுகாறும் உயிர் தரித்திருக்கிறேன். இந் நிலையில்என்னைக் கைவிட்டுத் தாங்கள் பிரிவீராயின் தங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன்’ என்று உறுதி மொழிந்தார். தமக்கையார் தவநிலை: தம்பியின் மனக்கலக்கம் திலகவதியாரின் மனத்தை மாற்றியது. ‘தம்பியார் இவ்வுலகில் உளராக வேண்டும்’ என்று எண்ணித் தம் முடிவை மாற்றிக்கொண்டார். அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி மனையின்கண் இருந்து மாதவம்பெருக்கி மருணீக்கியாரைப் பேணி வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டார். மருணீக்கியாரும் துயர் நீங்கி மகிழ்வுற்றார். வயது ஏற ஏற உலகியல் அறிவும் நன்கு வாய்க்கப்பெற்றார். உலகின் நிலையாமையை எண்ணி அறப்பணி மேற்கொண்டு அறச்சாலை, தண்ணீர்ப்பந்தர், சோலை, குளம் முதலிய அமைத்தார். வருந்தி வந்தோர்க்கு வேண்டியன ஈந்தார்; விருந்துபுரந்தந்தார். புலவரைப் போற்றினார். சமயங்களின் நன்னெறியினைத் தெரிந்துணர்தற்குஎண்ணினார். சிவபெருமானருள் செய்யாமையால் கொல்லாமை என்னும் நல்லறப் போர்வையில் உலவிய சமண சமயத்தைச் சார்ந்திட எண்ணினார்.
|