உசாவுவதாக உணர்ந்து பாடுகிறார். இறைவன் “என்று வந்தாய்” “எதற்கு வந்தாய்” என்று உசாவிக் கேட்ட கேள்விகளுக்கு விடை அளிப்பவராக அப்பர், “பத்தனாய்ப் பாடமாட்டேன்” என்று தொடங்கும் பாடலில், “அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே” என்று கூறுகிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லை இறைவனை வழிபட்டதைச் சேக்கிழார், ஐந்துபேர் அறிவையும் கண்களே கொள்ளும் படியாகவும், அளப்பரும் கரணங்கள் நான்கையும் சிந்தையே பெற்றதாகவும், குணம் ஒரு மூன்றும் சாத்துவிகமேயானதாகவும் அமைய, அவர் வழிபட்டார் என்கிறார். இங்ஙனம் இம்மூவரும் தில்லையை வழிபட்டபோது உயிர் ஒன்றிய நிலையில் அநுபவ உணர்வில் இருந்தனர் என்பதை அறிந்து இன்புறலாம். ஈகையின் சிறப்பு: திருநாவுக்கரசுசுவாமிகள் இந்நான்காம் திருமுறையில் பல இடங்களில் உலகியல் உண்மைகளையும், 96 தத்துவங்கள் பற்றிய குறிப்பையும் விளக்குகின்றார். மேலும் பொருள் உடையோர் அப்பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுதலே அதன் பயன் என்றும், அதனால் அருள்கிட்டும் என்றும், அங்ஙனம் கொடாதோருக்குக் கடுநரகமே வாய்க்கும் என்றும் பசு புண்ணியமான செயல்களைத் திருஐயாற்றுத் திருநேரிசையில் கூறுகிறார். இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார் | கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார் | பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார் | அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே. | -தி.4 ப.38 பா.10 |
பொருள் உடைமையின் பயன் ஏழைகட்குக் கொடுப்பதே என்னும் இக்கருத்து திருவள்ளுவர் கூறும், அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் | பெற்றான்பொருள் வைப்புழி | -திருக்குறள் 226 |
என்னும் திருக்குறளோடு இணைத்துச் சிந்திக்கத்தக்கதாயுள்ளது.
|