பக்கம் எண் :

31
 

ஒப்புநோக்கி உண்மை காண்க.

நாமார்க்கும் குடியல்லோம்:

பின்னே வந்த தேசத் தொண்டர்களாகிய காந்தி அடிகள் பாரதியார் போன்றவர்கட்கெல்லாம் தெய்வத் தொண்டராகிய அப்பரடிகள் வழிகாட்டியாக அமைந்து விளங்குகிறார்.

நாவரசர் சமணம் விட்டுச் சைவம் சார்ந்த போது, மகேந்திரவர்மப்பல்லவன் அமணர்துர்ப் போதனையால், ஏவலர் மூலம் நாவரசரை அழைத்துவரச் செய்தான், “நாமார்க்கும் குடியல்லோம்” “சங்கரன் நற்சங்க வெண்குழை யோர் காதில் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆள்” என்று சொல்லி ஏவலர்கட்கு ஏதம்வரக் கூடாதே என்று கருதி அவர்களின் வேண்டுகோட்படி முடிமன்னன் எதிர் அஞ்சாமல் சென்றார். “பாராண்டுபகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ பற்றற்றோமே” என்று பகர்ந்து நின்றார்.

யானையை விட்டு இடறச்செய்த போதும் “அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதும் இல்லை” என்று யானையின் எதிர்நின்றார். யானை அப்பரைவணங்கி அமணர்களைத் துரத்தியது.

சத்தியாக்கிரகம்:

சத்தியாக்கிரகம் மிகப் புனிதமானது. இதனை முதன் முதலில் நடத்திக் காட்டியவர் அப்பர் சுவாமிகளேயாவார். வரலாற்றுச் சிறப்புமிக்க பழையாறையில் அமணர்கள் சிவலிங்கத்தை மண்ணிலிட்டு மறைத்தனர். அஃதறிந்த அப்பர் உண்ணாநோன்பு மேற்கொண்டார். பெருமானின் வண்ணங்கண்டு வணங்கியன்றிப் போகேன் என்று சத்தியாக்கிரகம் செய்து வெற்றியும் கண்டார். இது காந்தியடிகளின் உண்ணாநோன்பிற்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்வதைக் காணலாம். அப்போது பாடிய பதிகத்தின் முதல்பாடல் காண்க.

தலையெ லாம்பறிக் குஞ்சமண்கையருள்

நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே

அலையி னார்பொழி லாறை வடதளி

நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.

-தி.5 ப.58 பா.1