பக்கம் எண் :

33
 

“இளமண நாகுதழுவிஏறு வருவன கண்டேன்”

-- பா.11

என்று பாடியுள்ளார்.

விலங்கினங்கள் பறவையினங்கள் தமது துணையுடன் வருவதை அன்றோ பாடியுள்ளார். கயிலை நாதனைக் கண்டதாகக் கூறவில்லையே என எண்ணுவோரும் உண்டு. இதில் பறவையினங்களும் விலங்கினங்களும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து வருவதைக் கண்டதாகக் கூறும் அப்பர் கடைசி அடியில் “கண்டேன்” அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்” என்று ஒவ்வொரு பாடல் இறுதியிலும் கூறியுள்ளதே குறிக்கொள்ளத்தக்கது.

பாதம் என்று ஒருமையில் சொன்னபோதிலும் பாதம் இரண்டையுமே தொகுதி ஒருமையாகச் சொன்னார் என்று கொள்ள வேண்டும். இரு திருவடிகளும் அம்மை அப்பரைக் குறிப்பன. வலது திருவடி சிவம். இது ஞானத்தைக் குறிப்பது. இடது திருவடி சக்தி, இது கிரியை-செயலைக் குறிப்பது. எனவே உலகம் முழுவதையும் அறியும் சிவத்தையும் உலக முழுவதையும் இயக்கும் சக்தியையும் ஒருங்கே கண்ட ஒருமைப்பாட்டை உணர்ந்து உலகிற்கு உணர்த்தினார் அப்பர் என்பதை நாம் நன்கு உணர்தல் வேண்டும்.

ஆணும் பெண்ணுமாக வந்த விலங்கையும், பறவைகளையும் சிவசக்தியாக, சிவசக்தியின் செயலாக தடத்த வடிவாகக் கண்டு காட்டினார் நமக்கெல்லாம் என்பது உணர்க.

தியாகேசர் திருவுரு:

‘பாடிளம் பூதத்தினானும்’ என்ற திருப்பதிகத்தில் (தி.4 ப.4) இறைவன் நினைப்பவர் நெஞ்சத்து உள்ளான் என்ற தத்துவத்தை விளக்குகிறார். ஆதிரைநாள் உகந்தவன் சிவபிரான்,என்பதை அறிவிக்கிறார். திருவாரூர்த் தியாகேசப் பெருமான் இருபத்தைந்து மகேஸ்வர மூர்த்தங்கட்கு உட்பட்டவரல்லர் என்பதை இறுதிப்பாடலில், ‘ஐயஞ்சின் அப்புறத்தான்’என்ற தொடரால் விளக்கியுள்ளார். அப்பாடலில், பொய்பேச அஞ்சவேண்டும், வாய்மைகள் பேசவேண்டும், அப்படிப்பட்ட புகழ் உடையோர்க்கே தியாகேசன் அருள்செய்வான் என்று கூறுகிறார். அப்பாடல் (தி.4ப.4 பா.10) காண்க.