பையஞ் சுடர்விடு நாகப்பள்ளிகொள்வா னுள்ளத் தானும் | கையஞ்சு நான்குடை யானைக் கால்விர லாலடர்த் தானும் | பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் | ஐயஞ்சி னப்புறத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. |
25 மகேஸ்வர மூர்த்தங்களுள் ஒன்றான சோமாஸ்கந்த வடிவம் போல் தியாகராஜர் தோன்றினாலும் அவர் சோமாஸ்கந்த வடிவிலும் வேறுபட்டு அதற்கு அப்பாற்பட்டவர் என்பது உணரத்தக்கது. என் மனத்தே வைத்தேன்: காஞ்சிபுரத்தில் கச்சியேகம் பனைத்தொழுது பாடிய “கரவாடும் வன்நெஞ்சர்” என்ற (தி.4ப.7) பதிகத்தில் வஞ்சகர் உள்ளத்திற்கு அரியவன் என்றும், வஞ்சகர் அல்லாதார் உள்ளத்தில் கலந்து உறவாடுபவன் என்றும் குறிக்கின்றார். “............ | அப்போது மலர்தூவி யைம்புலனுமகத்தடக்கி | எப்போது மினியானை யென்மனத்தேவைத்தேனே”. | -தி.4 ப.7 பா.3 |
என்பதும் அப்பதிகத்துள் உள்ள ஒரு பாடல்பகுதி. பெருமான் நமது உள்ளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார். இதனை மணிவாசகர்“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க” என்று பேசுவார். எப்போதும் இனியவனாக இருக்கும் பெருமான் நம் உள்ளத்தே எப்போதும் இருக்கவேண்டுமாயின் அப்போது மலர் தூவி இறைவனை வழிபடுதலும், ஐம்புலன் அடக்கி வாழ்தலும் இன்றியமையாதது. ஐம்புலனும் அடக்கம் இருந்தால்தான் ஞானம் உள்ளத்தே குடிபுகும். ஞானம் உள்ளவரிடத்தேதான் ஞானமே வடிவாக இனிமையாக விளங்கும் சிவபிரான் எப்போதும் நாம் இனிமையாக இருக்க நம் உள்ளத்தில் குடி கொள்வார். எனவே நாமும் எப்போதும் இனிமையாக வாழலாம். சிவபூசையின் முடிவில் “எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே” என்று உள்ளத்தே ஒடுக்கி உகப்புடன் பூசை நிறைவு காணவேண்டும். இப்பதிகம் நமக்கு உணர்த்தும் உண்மைகள் இவை.
|