பக்கம் எண் :

10
 

ஆசை அறுவது நமது முயற்சியால் ஆகாது. இறைவன் அருளைத்துணையாகப் பற்றினால் அறும். அதற்குத் துணை செய்கிறார் தருமைக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர், அப்பாடலை நாளும் ஓதுவோம். நலம் பெறுவோம். அப்பாடல்வருமாறு.

வந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை
இந்தவகை ஆசையெல்லாம் என் மனத்தில் - வந்தும் இனிச்
சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடல்
பேராத சொக்கநாதா! -சொக்கநாத வெண்பா.

ஆரூரில் அந்திக் காப்பு:

நமது சிவாலயங்களில் ஆறு கால பூசை உண்டெனினும் அவற்றுள் அந்திக்கால பூசையே சிறப்புடையது. இப்பூசை திருவாரூரில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதனை அப்பர், புக்க திருத்தாண்டகத்துள் ஒன்பதாம்பாடலில் குறித்துள்ளார்.

பொன்தீ மணிவிளக்கைப் பூதம் பற்றிவர புலியூர்ச்சிற்றம்பலம் எழுந்தருளும் பெருமான் மணியாரூரில் நின்று அந்தி வழிபாட்டை ஏற்றுச் செல்கிறார் என்று நயம்பட உரைத்துள்ளார். "மணியாரூர்நின்றந்தி கொள்ளக் கொள்ளப், பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப்,புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே" (தி.6 ப.2 பா.9)

தொழுதகை துன்பம் துடைப்பாய்:

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என்பது தொல்லோர்வாக்கு. "தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உன் தொழிலே" (தி.7 ப.1பா.9) என்பது சுந்தரர் வாக்கு. "தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி"(தி.8 போற். வரி 131) என்பது மணிமொழி. இதனை அப்பரும் "தொழுதகை துன்பம்துடைப்பாய் போற்றி" (தி.6 ப.5 பா.8) எனத் திருவதிகைப் போற்றித் திருத்தாண்டகம் எட்டாம் பாடலில் குறிக்கின்றார். இதற்குப் பொருள்-தொழுதவர்கட்குக் காலம் கடந்து அருள் செய்வதில்லை. உடனே அருள் செய்கிறார் என்கிறார் அப்பர். தொழுதகையோடேயே, சற்றும்தாமதியாமல் துன்பத்தைத் துடைப்பான் பரமன் என்று அருள்கிறார். அதேபாடலில் "அஞ்சொலாள்பாகம் அமர்ந்தாய் போற்றி" (தி.6 ப.5 பா.8)என்கிறார். ஐந்தாம் திருமுறையில் மயிலாடுதுறைப் பதிகத்தில்"அஞ்சொலாள் உமைபங்கன் அருளிலே" (தி.5 ப.39 பா.4) என்ற பாடலில் "அஞ்சொலாள்" என்ற சொற்றொடர் இங்கும் வந்துள்ளமையால் அஞ்சலாள் என்பது சரியல்ல, அஞ்சொலாள் என்பதே சரியான பாடம் என்பது தெளிவாகிறது.

கொடுவினையார் என்றும் குறுகாவடி:

கொடியவினைகளைச் செய்தவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபடமாட்டார்கள். அவர்களுடைய செயல் (வினை) கொடுமையானது.