பக்கம் எண் :

11
 

ஆகலின் அவர்கள் அவ்வினைப்பயனை அநுபவித்து மெல்வினையான பிறகேபெருமான் பக்கலில் வருவது சாத்தியமாகும். எனவேதான் கொடிய செயல்களைச் செய்தவர்கள் இறைவன் திருவடிக்கு வெகுதூரத்திலேயே இருப்பர். குறுகமாட்டார். குறுகவிடாது திருவருள், மெல்வினையாளர் தம் குறைகளை உணர்ந்து பெருமானைஅடையின் அவர்களைத் துன்பக்கடலில் ஆழாமல் எடுத்துக் காப்பாற்றுவார். இதனையே அப்பர், "கொடுவினையார் என்றும் குறுகாஅடி, குறைந்தடைந்தார் ஆழாமைக்காக்கும் அடி" (தி.6 ப.6 பா.2) என்று அருளிச் செய்தார். குறைந்தடைந்தாரை நல்லவர்கள் என்று சொல்லலாம். நல்லவர்கள் தொழுதேத்தும் நாரையூரும் என்பது அப்பர் அருள்வாக்கன்றோ!

உரு இரண்டும ஒவ்வா:

சிவபெருமான் சொரூப நிலையில் அருவும் (ஆகாயம்) அல்லனாய், உருவும் அல்லனாய், அருவுருவும் (சிவலிங்கம்) அல்லனாய் இருப்பவன். இதனை நம்குருஞானசம்பந்தர் "அருவும் உருவும் அருவுருவும் அல்லாப் பெரியவன்"என்கிறார். அப்பரம்பொருள் தடத்தநிலையில் (உயிர்கட்கு அருள் செய்யும்நிலையில்) உருவுகொண்டு அருள்பாலிக்கும் போது எல்லா உருவங்களிலும் அம்மைஅப்பர், சிவசத்திகலப்புடனேயே உருவம் கொள்வார். அவ்வுருவம் ஒன்றோடொன்று சிறிது வேறுபட்டே தோன்றும். பார்வைக்கு இவ்வேற்றுமை எல்லோருக்கும் தெரியாது. அவ்வுண்மையை திருவதிகைத் திருவடித்திருத்தாண்டகம் ஆறாம் பாடலில் அப்பர் தெரிவித்தருள்கின்றார். இறைவன் தனது இயல்பாய சொரூபத்தில் உரு என்று உணரப்படாத அடி, உயிர்கட்கு அருளும் பொருட்டுத் தடத்த நிலையில் உருவம் கொள்ளும்போது, அம்மை அப்பராகிய உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல், சிறிது வேறுபாட்டுடன் இருக்கும் இயல்பின என்கிறார். இன்று நமது உடம்பிலும் வலப்பக்கம் இடப்பக்கம் ஒவ்வாததாக, சிறிது வேறுபட்டதாக (உலக முழுவதும்)எல்லோருக்கும் இருப்பதை நாம் நன்கு உணரலாம். வலம் - சிவம். இடம் - சத்தி. மனித உடல் மட்டுமல்ல, விலங்கினங்கள், தாவரங்கள் எல்லாமே சிவசத்திசம்மேளனமாகத்தான் உள்ளன. எனவே எல்லாமே ஒன்றோடொன்று ஒவ்வாதனவாகவேஉள்ளன. ஊன்றி நோக்குவோர் இத்தத்துவத்தை நன்கு உணரலாம். நம் உடலிலும்வலம் பெரிது. இடம் சிறிது. தாவரத்தில் ஒரு இலையை எடுத்துப்பார்த்தால் வலதுபக்கம் பெரிதாய், வன்மையதாய் இருத்தலையும், இடது பக்கம் சிறிதாய் மென்மையாய் இருத்தலையும் காணலாம். அப்பாடல் பகுதி காண்க. "உருஇரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி, உரு என்று உணரப்படாத அடி" (தி.6 ப.6பா.6) இறைவன் உருவம் கடந்தவர். இதுவே அவர்தம் இயற்கைநிலை.