| 2807. | கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு | | | சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன் | | | பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை | | | பண்டெழுவர் தவத்துறைவெண்டுறைபைம் பொழிற் | | | குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை | | | பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு | | | மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு | | | துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே. | 11 |
திருச்சிற்றம்பலம்
11. பொ-ரை: கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை, தென்பாலைத்துறை, எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை, வெண்டுறை, பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம். கு-ரை: இத்திருத்தாண்டகம், 'துறை' என வருவனவற்றை வகுத்து அருளிச்செய்தது. பராய்த்துறை, சோற்றுத்துறை, பெருந்துறை, கடம்பந்துறை, ஆவடுதுறை, இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன. பாலைத்துறை, வெண்டுறை, ஆலந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை இவை சோழ நாட்டுத் தலங்கள். "குரங்காடுதுறை" என்ற பொதுமையால், வடகுரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை இரண்டும் கொள்க. ஆலந்துறை - அன்பிலாலந்துறை. குயில் - குயில்களை உடைய. தவத்துறை, பூந்துறை இவை வைப்புத்தலங்கள். 'தவத் துறை, ஏழு முனிவர் தவம் செய்த இடம்' என்பது "பண்டெழுவர் தவத்துறை" என்பதனால் விளங்கும்.
|