பக்கம் எண் :

1063
 

72. திருவலஞ்சுழி

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவாரூர்தொழ நினைந்து நல்லூரில் நம்பரருள் பெற்றுப் பழையாறை முதலாகப்பல தலங்களைப் பணிந்து திருவலஞ்சுழி யடைந்து தொழுது பாடியருடிளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு.புரா. 215)

குறிப்பு: இத்திருப்பதிகத்துள் ஒரு திருப்பாடலே கிடைத்துள்ளது; ஏனைய திருப்பாடல்கள் கிடைத்தில.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 285

பதிக எண்: 72

திருச்சிற்றம்பலம்

2808.அலையார் புனற்கங்கை நங்கை காண

அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்

தொலையாத வென்றியார் நின்றி யூரும்

நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்

டிலையார் படைகையி லேந்தி யெங்கும்

இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த

மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த

வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.

1

திருச்சிற்றம்பலம்


1. பொ-ரை: அலைபொருந்திய நீரையுடைய கங்கையை உமையம்மை காணுமாறு அம்பலத்தில் பிறர் ஆடுதற்கரிய திருக்கூத்தை ஆடி. அக்கூத்து வேடம் ஒரு காலும் விட்டு நீங்காத வெற்றியையுடைய சிவபெருமான் நின்றியூரையும், நெடுங்களத்தையும் விரும்பிப் பொருந்தி, இடபவாகனத்தை ஏறி இலைவடிவு கொண்ட முனைகளையுடைய படைக்கலங்களைக் கையிலேந்தி, எல்லா இடங்களிலும் நிறைந்து, இமையவரும், அருகிலிருந்து, உமையும் வணங்கித் துதிக்க மலையின் கண் நிறைந்து திரண்ட அருவியால் ஆகிய காவிரியாறு சூழ்ந்த வலஞ்சுழியைத் தாம் புகுந்துறையும் இடமாகவிரும்பி மேற்கொண்டார்.