"மணியார்வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் -தோன்றும்" (தி.6 ப.18 பா.9) என்றருளியுள்ளார். இது, திருவிளையாடற்புராணம், மண்சுமந்த படலத்தில் மதுரைப்பெருமான் வந்திக்காகக்கரையடைக்க வந்த வரலாற்றைக் குறிப்பதாகக் கொள்வர். இப்படியாயின் மணிவாசகர் காலம் முற்பட்டதாகிறது. இது சிந்தனைக்குரியதே. பத்தாம்பாடலில், "ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி அன்று, தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்" எனச் சண்டீசர் வரலாறு பேசப்படுவதும் காணலாம். முன்னே முளைத்தான்: "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6ப.19 பா.1) என்பது அப்பமூர்த்திகளின் ஆலவாய்த் திருத்தாண்டகத்தின் முதல்பாடலின் முதல் அடி. இதற்குப் பலரும் பலவாறாகப் பொருள் கண்டுள்ளனர்.உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் தோன்றுதற்குப் பெருமானேநிமித்தகாரணண் ஆதலின் எல்லார்க்கும் முன்னே தோன்றி நின்றருளினார் என்றும், ஏனைய தலங்களில் உள்ள இலிங்கமூர்த்திகட்கெலாம் முன்னேதோன்றி முளைத்த சுயம்புமூர்த்தி என்றும், முதலில் தோன்றிய பழைமைவாய்ந்த இலிங்கமூர்த்தி என்றும் குறிப்பிடுகின்றனர். பரஞ்சோதி முனிவர் கருத்து: திருவிளையாடற்புராணம் அருளிய பரஞ்சோதிமுனிவர்இதுபற்றி என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். தடாதகைப் பிராட்டியார்திருமணம் நிறைவெய்தியது. எல்லோரும் உணவருந்திச் செல்க என்பது இறையாணை. எல்லோரும் உணவருந்திச் சென்றனர். பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதமுனிவரும், அம்பலத்துளாடும் பரஞ்சுடர் நடனங் கண்டே நாங்கள் உணவுகொள்வதுநியமம் என்றனர். "அக்கூத்தை இங்குநாம் செய்கிறோம், கண்டுதரிசிக்க", என்றார் பெருமான். மேலும் உலகமாகிய விராட்புருஷனுக்குஇதயமாயிருப்பது சிதம்பரம். இம்மதுரையோ துவாதசாந்தத் தலமாயிருப்பது என்று சொல்ல, ஏனைய மூலாதாரம் முதலிய தலங்களையும் அருள்க என்றனர் முனிவர்கள். மூலாதாரத் தலங்கள்: திருவாரூர் மூலாதாரத் தலம். திருவானைக்கா சுவாதிட்டானத்தலம். திருவண்ணாமலை மணிபூரகத் தலம். சிதம்பரம் இருதயத் தலம்.திருக்காளத்தி கண்டத்தலம். காசி புருவமத்தியத் தலம். திருக்கயிலாயம் பிரமரந்திரத்தலம். மதுரை - துவாதசாந்தத் தலம். இத்தலம் எல்லாத்தலங்களினும் அதிகச் சிறப்பு வாய்ந்தது. எதனால் என்னின் முன்னர்த்தோன்றிய முறையால் என்று கூறிப்பெருமான் இருமுனிவரோடும்ஆலவாய்க் கோயில் சேர்ந்தார்.
|