பக்கம் எண் :

16
 

முன்னர்த் தோன்றியது துவாதசாந்தமாகலின், "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி" (தி.6 ப.19 பா.1) என அருள்ஞானியாகிய அப்பரடிகள் அருளிச் செய்தார். இதனால்தான் எல்லார்க்கும் முன்னேதோன்றி என்றருளினார். எல்லோரது தலைக்குமேல் துவாதசாந்தத்தலம் இருப்பது உண்மையாகலின் இங்ஙனம் கூறினார்.

மனித உடம்பில் ஆறாதாரம்:

இனி, மனித உடலிலும் இந்த ஆறு ஆதாரத் தலங்களையும் சிந்தித்தாலே இக்கருத்து இனிது விளங்கும். அதனையும் காண்போம். மனிதஉடலில் மூலாதாரம் என்பது எருவாய் கருவாய்க்கு இடைப்பட்ட இடம். இதைத்தான் மண்தலமாகிய திருவாரூர் என்பர். சுவாதிட்டானம் என்பது அடிவயிற்றுப்பகுதி, இதைத்தான் நீர்த்தலமாகிய திருவானைக்கா என்பர். மணிபூரகம் என்பது கொப்பூழ்ப் பகுதி. இதனைத்தான் நெருப்புத்தலமாகிய அண்ணாமலை என்பர்.அனாகதம் என்பது இதயத்தானம். இதைத்தான் ஆகாசத்தலமாகிய சிதம்பரம் என்பர். விசுத்தி என்பது (கழுத்து), கண்டத்தைக் குறிக்கும். இதைக்காற்றுத்தலமாகிய திருக்காளத்தி என்பர். ஆக்ஞை - ஆணையிடுதல். இதுவே புருவமத்தியமாகும். இது காசித்தலம் என்பர். ஆறாதாரத்திற்குமேல் ஏழாவது தானம்தலையின் உச்சி. பிரமரந்திரம் எனப்பேசப்பெறும். இதுவரை ஆதாரத்தலம்என்பர்.

நிராதாரத் தலம்:

இதற்குமேல் பற்றுக்கோடு இன்மையின் பன்னிரண்டங்குலம்வரை நிராதாரத்தலம் என்பர். இதையே துவாதசாந்தத் தலம் என்பர். இதற்குமேல் உள்ள இடம் மீதானம். எல்லாவற்றிற்கும் மேலான இடம். முதன்மையான இடம். இங்குதான் தத்துவங்கடந்த தத்துவாதீதனாகிய இறைவன் அம்மையோடு அப்பனாகி எழுந்தருளியுள்ளான். எனவே இங்கு நிகழ்த்துகின்றநடனக் கோலத்தைத் தரிசித்துச் செல்லுமாறு, பதஞ்சலி, வியாக்ரபாதமுனிவர்களுக்கு வெள்ளியம்பலக்கூத்தன் கட்டளை இட்டான். அவ்வாறேதரிசித்தேகினர் முனிவர்கள். இக்கருத்தே, "முளைத்தானை எல்லார்க்கும்முன்னே தோன்றி" (தி.6 ப.19 பா.1) என்பதற்கு உண்மைப்பொருள். எல்லோரும் சிந்தித்துச் சிறப்புறுக.

இதே கருத்தை, இப்பதிகத்தின் பத்தாவது பாடலின் முதல் இரண்டடிகளில் அப்பர் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழத்தக்கது. "மலையானைமாமேரு மன்னி னானை, வளர்புன் சடையானை வானோர் தங்கள், தலையானைஎன்தலையின் உச்சி என்றும் தாபித் திருந்தானை" (தி.6 ப.19 பா.10) என்பது அப்பாடற்பகுதி. மேலும் ஆறாதாரத் தலங்களையும், அவற்றுள் துவாதசாந்தத்தலத்தின் சிறப்பினையும் கூறும் திருவிளையாடல் புராணம்வெள்ளியம்பலக் கூத்தாடிய படலப் பாடல் இரண்டினையும் கண்டு மகிழ்வோம்.