காவிரியாற்றின் வடகரையிலுள்ள தலங்களுள் முதன்மை பெற்றது. திருமூலட்டானக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருப்பெயர் - மூலட்டானேசுவரர். இறைவியின் திருப்பெயர் - உமையம்மை. சிற்றம்பலத்தில் ஆனந்தத்தாண்டவம் புரியும் இறைவரின் திருப்பெயர் -நடராசர், கூத்தப்பெருமான். இங்கு நடராசப்பெருமானை சகளம் என்றும், ரகசிய தானத்தை நிஷ்களம் என்றும், ஸ்படிகலிங்கத்தை சகளநிகளன் எனவும் கூறுவர். இறைவியின் திருப்பெயர் சிவகாமசுந்தரியார். இவ்வம்மையார்க்குத் தனிக்கோயில் உண்டு. அது மூன்றாம் பிராகாரத்தில் நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கில் இருக்கிறது. மரம் - ஆல். தீர்த்தம் - சிவகங்கை. இது மூன்றாம் பிராகாரத்தில் சிவகாமசுந்தரி அம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது. இது சிவவடிவம் உடையது. இதில் நீராடி சந்தியாவந்தனம் முதலியன முடிப்பதுபெரும் புண்ணியம். வருடப்பிறப்பு, மார்கழித் திருவாதிரை, மாசித்திருமகம், சிவராத்திரி இவைகளில் இதில் நீராடுவது பெரும் விசேடமாகும். சிதம்பரத்திலிருந்து வேற்றூர்க்குச் செல்வோர் இதில் நீராடிச் சென்றால், தாம் தாம் நினைத்த காரியங்களில் வெற்றி எய்துவர். பூதம், பேய் முதலியவைகளினால் துன்பம் அடையார். பரமானந்த கூபம்: இது சிற்றம்பலத்திற்குக் கீழ்ப்பால் இருக்கிறது. இது சத்தி வடிவம் பொருந்தியது. குய்யதீர்த்தம்: இது சிதம்பரத்திற்கு வடகிழக்கேயுள்ள கிள்ளைக்கு அருகில் கடலில் பாசம் அறுத்த துறையையுடையது. இருளில் வந்த குருவைப் பகைவன் என்று எண்ணி, வருணன் அவர்மீது பாசத்தைவிட, அதனால் அவர் இறந்தார். வருணனை, அக்கொலைப் பாவத்திற்காக ஒரு பிசாசு அவனுடைய கால்களையும் கைகளையும் கழுத்தோடு சேர்த்துக் கட்டி கடலுள் இட்டது. வருணனும் நீண்டகாலம் அங்கு கிடந்தான். அங்ஙனம் கிடந்த வருணனுக்குச் சிவபெருமான் மாசி மாதத்தில் வெளிப்பட்டு அப்பாசக்கட்டு அற்றுப்போகும்படி அருள் புரிந்தார். ஆதலின் அத்துறை பாசமறுத்தான்துறை என்னும் பெயர் எய்திற்று.
|