பக்கம் எண் :

18
 

சாரும்படி1 செய்கிறான். இது இறைவனின் பேரருள் வெளிப்பாடன்றோ. இவ்விரு கருத்துக்களும் அமைந்துள்ள பாடல் காண்க.

குலம்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்

குலவரையின் மடப்பாவை யிடப்பா லானை

மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்

சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னுந்

தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க் கெல்லாம்

நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற்றுஉய்ந்த வாறே.

(தி.6 ப.20 பா.6)

இதே பதிகம், பத்தாம் பாடலிறுதியில், தகுதியுடைய உயிர்களின் மனத்தில் இறைவன் என்றும் நிலைபெற்று விளங்குகிறான் என்பதை, "மறவாதார் மனத்தென்றும் மன்னினானை" என்று குறிப்பிட்டுள்ளமையும் அறிந்து மகிழத்தக்கது.

நரகம் சாராமல் காப்பான்:

நரகம் என்பது துன்ப உலகம். அதில்போய் விழாமல் காப்பவன் இறைவன்,எப்படிக் காக்கின்றான்? மக்களை நன்னெறிப் படுத்துவதால் காக்கின்றான். இதனைத் திருநாகைக்காரோணத் தாண்டகப்பகுதியில் தெளிவிக்கிறார்அப்பர். "தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை" (தி.6 ப.22பா.9) என்பது அப்பாடல் பகுதி. இப்பாடல் தலைப்பு "சொல்லார்ந்த" என்பது.

வேண்டுவார் வேண்டுவதே ஈவான்:

மக்களின் வேண்டுகோள், அவரவர் தரத்திற்கு ஏற்ப, பலதரப்படும். அத்தனை மக்களையும், ஏனைய உயிர்களையும், அதனதன், தன்மை - தரத்திற்கேற்ப, வேண்டியதை வேண்டியாங்குக் கொடுத்தே அவ்வவ்வுயிர்களை ஈடேற்றம் செய்யவேண்டும். அதனைத் திருமறைக்காட்டில் உறைகின்ற ஈசன் வழங்குகிறான் என்கிறார் அப்பர். அப்பாடல் பகுதி காண்க. "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" (தி.6 ப.23 பா.1). இப்பகுதியின் பாடல் தலைப்பு "தூண்டு சுடரனைய சோதி" என்பது.


1 பலகோடி பிறவிகள் எதற்கு? ஒரே பிறவியிலேயே ஈடேற்றம் செய்யலாகாதா என்பர் சிலர். இது இறைவனின் குறையன்று. உயிர்களின் குறை. உதாரணமாக, நெய்வேலியில் இப்பொழுது எடுக்கப்பெறும் பழுப்பு நிலக்கரி, மேலும் ஒரு இலட்சம் ஆண்டுகள் உள்ளிருக்குமாயின் கறுப்பு நிலக்கரியாகும். நிலக்கரி பக்குவப்படவே இத்தனை ஆண்டுகாலம் தேவை எனின், உயிர் பக்குவப்பட எவ்வளவுகாலம் வேண்டும்? உணர்வுடையோர் ஓர்ந்துணர்ந்து கொள்வார்களாக.