சிறப்புடையாரோடு இணைந்து அருளுவன் இறைவன் என்பது கருத்து. ஆயிரம் கொம்புகளைக் கொண்ட யானையாகிய அயிராவணத்தில் ஏறாது, ஆனேறு ஏறி, அமரர்நாடு ஆளாது ஆரூர் ஆண்ட அயிராம்வணமாக இலங்கும் இறைவனே! என் அம்மானே! நின் அருட்கண் துணையின்றி யார் எது செய்ய வல்லார்? என்று கேட்டு அருளுகின்றார். இப்பாடலில் நுட்பமான பல கருத்துக்கள் உள்ளன. "உயிரை அடிமை ஓலை எழுதி இறைவனிடத்துத் தருதல்" என்றால், தன்னை - தன் முனைப்பை -தன் செயலை அறவே மறந்து, துறந்து, இனி எல்லாம் நீயே என்று சரண் புகுதல். இதனை மாணிக்கவாசகர் தன் அநுபவமாகத் திருப்பெருந்துறையில் குருந்தமர நீழலில், இறைவன் குருநாதராக இருந்து காட்சிதந்த பொழுது உயிரை அர்ப்பணித்ததாகக் கூறுகிறார். "அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும், குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ - இன்று ஓர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே, நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" (தி.8 குழைத். பா.7) என்று அருளுகின்றார். உயிர்,உடல், உடைமை அனைத்தையும் ஆண்டவன் கொண்டான் என்கிறார். ஆவி, உடல், உடைமை எல்லாம் என்பதில்லாமல், "எல்லாமும்" என்று முற்றும்மை கொடுத்துக் கூறியிருப்பதனால், இனி என்னிடம் ஏதும் இல்லை என்பது பொருளாயிற்று. இங்ஙனம் அர்ப்பணித்தலே, "உயிர் ஆவணம்செய்து உன்கைத்தருதல்" என்பது. சுந்தரரும் திருவாரூர்த் தேவாரத்தில் "மீளா அடிமை உமக்கே ஆளாய்" (தி.7 ப.95 பா.1) என்று அருளியிருப்பதும் இக்கருத்தையே உணர்த்துகிறது. ஈண்டு "உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி" என்பது அடியார்களுடன் உடனாய் இருந்து அருளுகின்றான் என்னும் கருத்துடையது. இது வே யோகநெறி ஆகும், ஒட்டுதல் யோகம் ஆம். "ஏகபோகமாய் நீயும் நானுமாய்" என்று அருணகிரிநாதர் குறிப்பது ஈண்டு நினையத்தகும். அடுத்து இந்தப்பாடலில் "அயிராம்வணமே என் அம்மானே" என்பதில்"அயிராம்வணமே" என்றதற்குப் பொருள் நுண்மணலால் ஆகிய வடிவத்தையுடையவனே என்பதாகும். அயிர்' என்னும் சொல்லிற்கு நுண்மணல் என்பதுபொருள். அந்த நுண்மணலையே உண்டு வாழும் மீன்தான் அயிரை மீன், எனவே நுண்மணலால் ஆகிய திருவுருவத்தையுடையவனே (புற்றிடங்கொண்டவனே) என்பார். 'அயிராம்வண்ணமே" என்றருளினார். இக்கருத்துக்களையுடைய பாடல் காண்க. | உயிரா வணம்இருந்து உற்று நோக்கி | உள்ளக் கிழியில் உருஎழுதி | | உயிரா வணம்செய்திட்டு உன்கைத் தந்தால் | உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி |
|