| அயிரா வணம்ஏறாது ஆனேறு ஏறி | அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட | | அயிரா வணமே என் அம்மானே நின் | அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே. | -தி.6 ப.25 பா.1 |
என்பது அப்பாடல். அயிராவணம் ஏறாது, ஆனேறு ஏறி, அமரர்நாடு ஆளாது, ஆரூர் ஆண்ட இறைவன், என்பதால் அவன் தனக்குரிய வாய்ப்பு வசதிகளையெல்லாம் விட்டுவிட்டு, மன்னுயிர்களை ஈடேற்றம் செய்யும் பொருட்டு இந்த மண்ணுலகுக்கு எளிவந்த கருணாமூர்த்தியாக இறங்கி வந்தான் என்று போற்றுகிறார். ஏத்தாதார் மனத்துஇருள்: இறைவனை இரவும் பகலும் எப்பொழுதும் நாவாரத் துதித்துஏத்தும் அடியார் உள்ளத்து அவன் ஒளிவளர் விளக்காக ஒளிவிடுவான். அல்லாதார் உள்ளத்து இருளாயிருப்பான். இதனைத் திருவாரூர் அரநெறித் திருத்தாண்டகம், "பகலவன்தன்" (தி.6 ப.33 பா.10) என்ற பாடலில்" ஏத்தாதார் மனத்தகத்துள் இருளானானை" என்றும், "பொருளியல்நல்" (தி.6 ப.33 பா.7) என்ற பாடலில் "மருளியலும் சிந்தையர்க்கு மருந்துதன்னை" என்றும் அருளியிருப்பதால் தெளியலாம். திருவாரூர் அரநெறி என்பது, திருவாரூர் திருமூலட்டானர் சந்நிதிக்கு எதிரில், வலப்பக்கம் மேற்கு நோக்கிய சந்நிதியாகத் திகழ்வது. நமிநந்தி அடிகள் நாயனார், நீரால் திருவிளக்கு இட்ட திருத்தலம். செருத்துணைநாயனார், மலர்தொடுக்கும் இடத்தின் கீழ் இருந்த மலரை முகந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கரிந்ததும், கழற்சிங்க நாயனார் இதை அறிந்து, மலரை எடுத்த மனைவியின் கையைத் தடிந்ததுமாகிய தலம் என்பதும் அறியத்தக்கது. திருவாரூர் கோயிலாக் கொண்ட நாள்: திருவாரூர் மிகமிகப் பழமைவாய்ந்த திருத்தலம். இதனைப்பல புராணக் குறிப்புக்கள் கொண்டும், வரலாற்றுக் குறிப்புக்கள் கொண்டும் விளக்குகிறார் அப்பர். ஆரூர்ப் பெருமானே நீ ஒருவனாக, ஏகனாக இருந்த போதே இக்கோயிலை. இடமாகக் கொண்டனையா? ஓருருவே மூவுருவாய் அயன், அரி, அரன் எனப்படைத்து, காத்து, அழிக்கத் தொடங்கிய அந்நாளோ? மார்க்கண்டேயர் மீதுபாசம் வீசிய நாளில் கோபித்துக் காலனைக் காய்ந்த நாளோ? காமனை ஒருகாலத்தில் நெற்றிக் கண்ணால் விழித்தழித்தனையே? அந்நாளோ? பஞ்சபூதங்களிலும் கலந்திருந்து மண் முதல் விண் முடிய ஐம்பூதங்களையும் படைத்த நாளோ? மான் கன்றினைக் கையிலே ஏந்திய பெருமானே! "ஒப்பற்ற உமாதேவி உனது இடப்பாகத்தைத் திருவினளாய்ச் சேர்ந்தாளே அந்த நாளோ?அதற்கு முன்போ பின்போ திருவாரூர் கோயிலாகக் கொண்ட நாள்? என்று வினா வடிவிலேயே பதிகம் (தி.6 ப.34) முழுவதும் பாடியுள்ளார்.
|