இல்லாதவன். இதனை வலிவலம் தாண்டகத்துள் "ஏயவன்காண் எல்லார்க்கும் இயல்பானான்காண், இன்பன்காண் துன்பங்கள் இல்லாதான் காண்" (தி.6 ப.48பா.3) என்ற அடியினால் தெளிவித்துள்ளார். திருக்கோகரணம், "பின்னுசடைமேல்" (தி.6 ப.49 பா.8) என்னும் தாண்டகத்து மூன்றாம் அடியில்,"இன்னவுரு" என்று அறிவொண்ணாதான் என்று அருளியமை, உருவொன்றில்லா உத்தமத் திறத்தை எடுத்துக் காட்டுகிறது. பத்தாம் பாடல் மூன்றாம் அடியில்" பொய்யர் மனத்துப் புறம்பாவான் காண்" (தி.6 ப.49 பா.10) என்று இறைவனது தூய தன்மையை எடுத்தாள்கின்றார். நன்னெறிக்கண் சேராதாரே: எல்லோருக்கும் நல்லவனாகிய இறைவனைச் சேர்கின்றவர்கள் தீநெறி நீத்து நன்னெறி சேர்கின்றனர். அங்ஙனம் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே, என்று இரங்குகிறார். இக்கருத்தைத் திருவீழிமிழலைப் பெருமானைத் தரிசிக்கிறபோது அருளிச் செய்துள்ளார். "போரானை" (தி.6ப.50 பா.1) எனத்தொடங்கும் திருத்தாண்டகப் பதிகம் முழுவதிலும் ஈற்றடியில்" திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே" என்று இரங்கி அருளியுள்ளார். இதனை உடன்பாட்டு வகையில் கூறியுள்ளார். பெருமானைச் சேராதவர்கள் எல்லாம் நன்னெறிக்கண் சேராதாரே, என்று எதிர்மறைவகையாலும் அருளியுள்ளார். இக்கூற்று திருநாகேச்சுரம் "தாயவனை" (தி.6 ப.66 பா.1-10) எனத் தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடல் முழுவதும் இறுதியில் "திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே" என்றருளியுள்ளமை கண்டு மகிழ்க. அகச்சான்று: திருவீழிமிழலைப் பதிகத்து மூன்றாம் பாடலில், "நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை" (தி.6 ப.50பா.3) என்று பெருமானின் தூய நிலையைப் புலப்படுத்தியுள்ளார். இதே கருத்தைத் திருஇசைப் பாவிலும் "மங்கையோடிருந்தே யோகுசெய்வானை" (தி.9திருவிசை. 13 பா.11) என்று அருளியுள்ளமை ஈண்டு சிந்தித்தற்குரியது. இதே பொருளில், "வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை"(தி.6 ப.50 பா.4) என வருவதும் காண்க. வஞ்சனை இங்கு ஐய உணர்வு. பெருமான் நமக்கு அருள் செய்வானோ செய்யானோ என்ற சந்தேகத்துடன் அஞ்செழுத்தை ஓதுவார்க்கு, வெகுதூரத்திற்கு அப்பால் இருப்பவன் பெருமான் என்பதைக் குறித்துள்ளமை கண்டு உண்மை உணர்வோமாக. மேலும் இப் பதிகத்துள் "வெஞ்சொற் சமண்சிறையில் என்னை மீட்டார்" என்றும் "எண்ணில்சமண் தீர்த்தென்னை ஆட்கொண்டான்காண்" என்றும் தமது வாழ்வியல் உண்மைகளை எடுத்துக் காட்டியுள்ளார்.
|