பாமாலை பாடப் பயில்வித்தான்: ஞானசம்பந்தருடன் திருக்கோலக்கா வணங்கி விடைபெற்ற அப்பர், திருக்கருப்பறியலூர் முதலிய தலங்களை வணங்கப்போம் வழியில் திருப்புள்ளிருக்குவேளூரைப் பணிந்து போற்றினார். போற்றிய திருத்தாண்டகப் பதிகமே "ஆண்டானை அடியேனை" (தி.6 ப.54 பா.1) எனத் தொடங்குவது. அதில் மூன்றாம் பாடல் "பத்திமையால் பணிந்து அடியேன், தன்னைப்பன்னாள் பாமாலை பாடப்பயில்வித்தானை" என்பதாகும். இதில், தன்னைப் பன்னாளும் பாமாலை பாடத் தனக்கு வைத்தியநாதப் பெருமான்பயிற்சி அளித்தார் என்று கூறுகிறார். இதே கருத்தையும் தொடரையும் திருமுதுகுன்றத் திருத்தாண்டகமாகிய "எத்திசையும் வானவர்கள்" (தி.6ப.68 பா.3) எனத்தொடங்கும் பாடலில் "பத்தனாய்ப் பணிந்து அடியேன், தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை" என்று அருளியுள்ளமைகண்டு மகிழத் தக்கது. தன்னை என்பது இங்கே இறைவனைக் குறித்தது. தன்னைப் போல் ஆக்கும் அருளாளன்: பெரியோர், தாம் சொன்னதைக்கேட்டு நடக்கும் பிள்ளையாக ஒருவன் இருப்பானாயின், தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்து அவனைத் தன்னைப் போலாக்கவே கருதுவர். இந்த உணர்வு அப்பெரியோர்கட்கு எங்கிருந்து வந்தது?இறைவனிடமிருந்தே வந்தது. அப்பெரியோரும் இறைவனையே நம்பித் தொழுததால், இறைவன் அவர்களையும் தன்னைப்போலாக்கியுள்ளான். இதே நிலையில் அவர்களும் தமக்குக் கால்வழியாக வரும் நல் இளைஞர்களைத் தம்மைப்போலவே ஆக்க முயல்கின்றனர். இக்கருத்தை "இருளாய உள்ளத்தின்" (தி.6 ப.54 பா.4) என்ற பாடலில் இனிது விளக்குகிறார். இருளாய உள்ளம் - ஆணவ இருள் வேறு தான்வேறு என்றில்லாமல் அத்துவிதமாய்க் கலந்துள்ள உயிரை (உள்ளம் - உயிர், ஆன்மா), ஆணவ இருளிலிருந்து நீக்கி, இடரையும் அதற்கு முதலாகிய பாவத்தையும் கெடுத்து, அறிவில் ஏழையாகிய என்னை உய்யுமாறு, என் தெளிவில்லாத சிந்தையைத் தெளிவித்துத் தன்னைப்போல் என்னை ஆக்குதற்கு சிவலோகமாகிய தனது உலகத்தை அறியுமாறு சிந்தை தந்த அருளாளன் வேளூர்ப்பெருமான். அவனைப் "போற்றாதே பலநாள்கள் போக்கினேனே" என்று இரங்குகிறார்.அப்பாடற்பகுதி காண்க. | "இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி | இடர்பாவம் கெடுத்துஏழையேனை உய்யத் | | தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல் | சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை" | - தி.6 ப.54 பா.4 |
|