பக்கம் எண் :

25
 

வாராத செல்வம் வருவிப்பான்:

பேராயிரம் உடைய பெருமானை வானோர்கள் பயன் அடையப்பரவுகிறார்கள். அப்பெருமானைப் பிரிவிலாது - இடையீடில்லாது வழிபடும் பக்தர்களுக்கு என்றும் யாவர்க்கும் கிடைக்காத பெருஞ்செல்வமாகிய வீடுபேற்றை இறைவன் அருள்கிறான். அவ்விடுதலையை நாம் பெறுதற்கு ஐந்தெழுத்தாகிய மந்திரத்தாலும், தந்திரமாகிய ஆகமங்களை அறியச் செய்வதாலும், மருந்தாகிய செபம், பூசை, தியானம் முதலியவற்றைச் செய்வதாலும் அறியாமையாகிய ஆணவம் முதலிய நோய்களை நீக்கி வீடுஅருள்கிறான்.

வாராத செல்வம் என்பது எவர்க்கும் எளிதில் கிடைக்கப்பெறாத மோட்சம். அஃதாவது வீடுபேறு, விடுதலை. இது கிடைத்தற்கு நம்மிடையேஉள்ள அறியாமை நீங்கவேண்டும். இதனையே எவராலும் தீர்க்கமுடியாத பிறவிநோயைத் தீர்த்தருள வல்லான் என்றருளினார். "தீராநோய் தீர்த்தருள வல்லான்" என்பதால் துன்ப நீக்கத்தையும், "வாராதசெல்வம் வருவிப்பான்" என்றதால், இன்ப ஆக்கத்தையும் இப்பாடலிலேயே அப்பர் அருளியுள்ளார். இங்குள்ள இறைவன் "பவரோக வைத்தியநாதர்"என்னும் பெயருடையவர். பவம் - பிறப்பு. பிறவி நோயைத் தீர்ப்பவர். எனவே உடலில் வரும் நோயைத் தீர்ப்பவர் என்பது சொல்லத் தேவையில்லை அன்றோ!

சிந்தை புகுந்தாய் போற்றி:

திருக்கயிலாயக் காட்சியைத் திருவையாற்றில் கண்டபோது "வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" (தி.6 ப.55 பா.1) எனத் தொடங்கி, மூன்று திருத்தாண்டகப்பதிகம் பாடிப் போற்றினார். இம்மூன்று திருப்பதிகங்களும் போற்றித் திருத்தாண்டகம் என்றே போற்றப்படுகின்றன. இவற்றுள் "வேற்றாகி" என்ற பதிகத்தில் 2ஆம் பாடலில் வெளியில் எங்கும் போகாமல் என் சிந்தையுள் புகுந்தாய் என்கிறார். "போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி" என்பது அத்தொடராகும். 7,8ஆம் பாடல்களில், "என் சிந்தை நீங்கா இறைவா போற்றி" என்றருளி மகிழ்கிறார். 11ஆம் பாடலில் "பண்டே என் சிந்தைபுகுந்தாய் போற்றி" என்று தம்மைப் பெருமான் திருவதிகையில் சூலைகொடுத்து ஆண்டருளிய அன்றே என் சிந்தைபுகுந்தான் என்பதை நினைந்து அருளியுள்ளார். அன்றுமுதல் இடையீடில்லாது இடையறாப் பேரன்புடன் பரமனை நினைந்தும் பாடியும் வரும் பண்பை உணர்த்துகிறது, இப்பாடலில் காணும் பண்டே என்ற குறிப்பு. அடியார் அடிமைத் திறத்தை, ஆண்டவனாகிய இறைவன் நன்கு அறிவான் என்பதை மூன்றாவது போற்றித் திருத்தாண்டகப் பதிக எட்டாம் பாடலில் குறிப்பிடுகிறார். "அடியார் அடிமை அறிவாய் போற்றி" என்பது அப்பகுதியாகும்.