பக்கம் எண் :

26
 

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றார்:

தன்னையே நம்பிவழிபடும் அடியவர்கள், மிகக்கற்றார் இல்லையாயினும், மிகக் கற்றவரினும் மேலாயநெறிநிற்கக் கற்பிக்கின்றார் கடவுள். இதனையே பல இடங்களிலும் சமயாசாரியப்பெருமக்கள் அருளியுள்ளனர். அவற்றுள் சில இடங்கள் குறிக்கலாம். திருவெண்ணியூர் திருத்தாண்டகப்பதிகம் முதல் பாடலிலேயே "தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினாரும் என்றருளியுள்ளார்" (தி.6 ப.59 பா.1)."துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னை" (தி.6 ப.19 பா.7) என்பது திருஆலவாய்த்திருத்தாண்டகம் ஏழாம் பாடல்.

கற்பகம்:

திருக்கற்குடிக் கற்பகத்தைக் காண்போம். கற்பகதரு நினைத்ததையெல்லாம் தரும் என்பர். கற்குடிப்பெருமான் கற்பகமாய் அருள்செய்பவன். அவன் "மெய்யானைப் பொய்யேதும் இல்லான்தன்னை"(தி.6 ப.60 பா.2) எனப் போற்றப் பெறுகிறார். இடரை எல்லாம் காத்தவன் என்கிறார். "பாரில் வாழ் உயிர்கட்கெல்லாம் கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக்கண்டேன் நானே" (தி.6 ப.60 பா.6)என்பது கற்குடிக்காட்சி. "பல்லாடுதலை சடைமேல்" என்னும் தாண்டகத்தில் "கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே" என்கிறார் (தி.6 ப.92 பா.2). இத் திருக்கழுக் குன்றத் தாண்டகப் பதிகத்தில் இரண்டே பாடல்கள்தான் உள்ளன. இரு பாடல்களிலும் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் என்றருள்கின்றார்."முவிலைநற்சூலம்" எனத் தொடங்கும் திருக் கஞ்சனூர்த் தாண்டகப்பதிகப் பத்துப் பாடல்களின் இறுதியிலும் "கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே" (தி.6 ப.90 பா.1-10)என்றருளியுள்ளமை கண்டு இன்புறத்தக்கது.

நடுதறியப்பர்:

திருவிளையாடற்புராணத்தில் விருத்தகுமாரபாலரான படல வரலாறு போல், கன்றாப்பூரிலும் ஒரு வரலாறு வருகிறது. இத்தலத்தில் சைவப்பெண் ஒருத்தி வைணவக்குடியில் வாழ்க்கைப்பட்டாள். சிவபத்தியைக்காட்டஅவளுக்கு அவ்வீட்டில் இடமில்லை. மாட்டுத்தொழுவத்தில் கன்றுக்குட்டி கட்டும் முளைத் தறியையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். வைணவக் கணவன் அது கண்டு பொறாது கோடரியால் அத்தறியைப் பிளக்க முயன்றான். அப்போது அத்தறியே சிவலிங்கமாய்க் காட்சி தந்தது. அதுமுதல்ஊர் கன்றாப்பூர் என்றும், பெருமான் நடுதறியப்பர் என்றும் போற்றப்பெறுகிறார்.