"மாதினையோர்" என்று தொடங்கும் பதிகம் முழுவதும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், "கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே" (தி.6 ப.61)என்றருளியுள்ளார். முதல்பாடல் மூன்றாம் அடியில் வாதனையால் என்பதை வாசனையால் என்று பொருள் கொள்ளவேண்டும். மனத்தூய்மையும், அன்பும், ஆசாரமும், நெறி தவறாமையுமே வாழ்வின் இன்றியமையாமை என்பதை இப்பதிகம் எடுத்துக் காட்டுகிறது. ஓங்காரம்: அகர, உகர, மகரமே ஓங்காரம். ஓங்காரத்து உட்பொருளாயிருப்பவனே பரம்பொருள். எல்லாக் கலைகளும் அவ் ஓங்காரத்துள்ளே இருந்துதான் வெளிப்படுகின்றன. அவ்வனைத்திற்கும் முதல்வனாயிருப்பவனே பரம்பொருள். அவனன்றி ஓரணுவும் அசையாது. அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன், மறைப்பவன், அருள்பவன். இக்கருத்தை எல்லாம் உள்ளடக்கியதே ஓங்காரம்; ஓம் என்னும் பிரணவம். இதன் உள்ளும் புறமுமாய் இருப்பவனே பரம்பொருள். இதனை "ஒரு சுடராய் உலகேழும் ஆனான் கண்டாய், ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய்" (தி.6 ப.39 பா.10)என்றருள்கிறார் அப்பர். இது திருமழபாடித் தாண்டகத்தின் இறுதிப்பாடல்.இதே கருத்தை திருவானைக்கா திருத்தாண்டகம் "முற்றாதவெண்திங்கள்" என்ற பாடலின் இரண்டாம் அடியில் "உற்றானைப்பல்லுயிர்க்கும் துணையானானை ஓங்காரத்துட் பொருளை உலகமெல்லாம் பெற்றானைப்பின் இறக்கம் செய்வான் தன்னை" (தி.6 ப.63 பா.3) என்று அருளியுள்ளார். காஞ்சிபுரத் திருத்தாண்டகம் இரண்டாம் பதிகம் முதல் பாடல் முதல் அடியில் "உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர்மெய்ஞ்ஞானம், விரித்தவன்காண்" (தி.6 ப.65 பா.1) என்றும், திருக்கீழ்வேளூர்த் திருத்தாண்டகம் "உளர்ஒளியை" எனத்தொடங்கும் பாடலில் "ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை" (தி.6 ப.67 பா.7)என்றும், திருமாற் பேறு தாண்டகத்தில் "உற்றானை உடல் தனக்கோர் உயிரானானை, ஓங்காரத்து ஒருவனை அங்கு உமையோர் பாகம், பெற்றானை" (தி.6ப.80 பா.4) என்றும் அருளியுள்ளமை காண்க. ஆலின் கீழ் அறம் உரைத்தான்: ஆலின்கீழ் பெருமான் தட்சணாமூர்த்தியாய் எழுந்தருளி, சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமார் ஆகிய நால்வர்க்கு அறம், பொருள்,இன்பம், வீடு உபதேசித்ததுடன், வேதம், ஆறங்கங்களும் உபதேசித்ததாக "உரித்தானை" என்னும் திருநாகேச்சரப் பாடலில் குறித்துள்ளார். இப்பாடற்பகுதி காண்க, "......தன்னடைந்தார் தம் வினைநோய் பாவமெல்லாம், அரித்தானை
|