சேந்தன் செய்யவாய் மணி சந்திவிளக்கு ஒன்றுக்கும், ஆற்றுத் தண்ணீரமுது தூணி கொள்ளிக்குடத்தால் நிசதி ஒரு குடத்துக்கும் ஆகப்பதின் கழஞ்சு பொன்னைவைத்து அதன் வட்டியால் அவைகளைச் செய்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான். மேற்குறித்த செம்பியன் வெய்திவேளான் திருவெறும்பியூர் ஆழ்வார் மலைமேல் சந்திராதித் தவல் பிராமணர் பதினைந்துபேர் உண்பதற்கு நில நிவந்தம் அளித்திருந்தான். 15. திருஐயாறு கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி முடியத் திருவையாற்றிலிருந்து கண்டியூர் வரை பரவியிருந்தது. கண்டியூர், திருச்சோற்றுத்துறை இவைகளைப் பாடிய தேவார ஆசிரியர்கள் இவ்விரு பதிகளையும் காவிரிக்கரையிலுள்ள பதிகளாகவே குறிப்பிட்டுள்ளனர். திருவையாற்றுக்கும் கண்டியூர்க்கும் இடையிலுள்ள குடமுருட்டியாறு அக்காலத்தில் இல்லை. அது காவிரியிலிருந்து கும்பகோணத்திற்குக் கிழக்கே பிரிந்துசென்றது. கடுவாய் என்பது குடமுருட்டியாறாகும். இக்கடுவாய்க்கரையிலுள்ள புத்தூரை, கடுவாய்க்கரைப்புத்தூர் என்று சிவநெறிகாட்டியருளிய குரவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல, அக்காலத்தில் குடமுருட்டியாகிய கடுவாயாறு கண்டியூர்ப்பக்கமாக ஓடியிருக்குமானால் அதைக் கடுவாய்க்கரைக் கண்டியூர் என்றே கூறியிருக்கவேண்டுமே! அங்ஙனம் குறிப்பிடாததன் காரணத்தையும் உணரவேண்டும். இதற்குப் பிற்காலத்தேதான், திருக்காட்டுப்பள்ளியைத் தலைப்பாகக் கொண்டு, குடமுருட்டியாற்றை வெட்டி, கும்பகோணத்திற்குக் கிழக்கிலிருந்து செல்லும் கடுவாயாற்றோடு சேர்த்து, காவிரியாற்றைக் குறுக்கி, மக்கள் வாழ்வுக்கும் சாகுபடிக்கும் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனால் ஒரே நதியெனல்பொருந்தும் என்பர் சிலர். தஞ்சாவூர் முதல் திருவையாறு முடிய இருக்கும் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என்னும் ஐந்து ஆறுகளை உடையது ஆகையால், ஐயாறு என்று பெயர் பெற்றது என்பர் சிற்சிலர். சூரியபுட்கரணி, சந்திரபுட்கரணி, கங்கை, பாலாறு, (நந்திவாய்நுரை), நந்திதீர்த்தம் என்னும் ஐந்து தெய்வீக நதிகள் தம்முள் கலப்பதால் ஐயாறு என்று பெயர் பெற்றது என்பர் சிற்சிலர். பஞ்சநதம் என்பது, ஐயாறு என்னுந் தமிழுக்கு ஒத்த வடசொல். இக்கோயில் தருமபுர ஆதீன அருளாட்சியில் விளங்குவதாகும்.
|