தஞ்சாவூருக்கு வடக்கே 10.கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தஞ்சை, கும்பகோணம் திருக்காட்டுப்பள்ளி முதலிய நகர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. இறைவரின் திருப்பெயர் ஐயாறப்பர்; வட மொழியில் பஞ்சநதீசுவரர்; பிரணதார்த்திஹரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர் அறம்வளர்த்தநாயகி; வடமொழியில் தர்ம சம்வர்த்தினி என்பர். தீர்த்தம் காவிரி, சூரியபுட்கரிணி என்பன. இது சமயகுரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது. "நந்தி அருள்பெற்ற நன்னகர்" என்று சேக்கிழார் இப்பதியைச் சிறப்பித்துள்ளார். சிலாதமுனிவர்க்குத் திருமகனாய் அவதரித்த திருநந்தி தேவர், சுயசாதேவியை மணந்து, ஐயாறப்பரைப் பூசித்துச் சிவசாரூபம் பெற்றமையை உட்கொண்டு சேக்கிழார் இவ்வாறு கூறலானார். கடலரசன் இங்குவந்து ஐயாறப்பரைப் பூசித்துப் பேறுபெற்றான். "ஆழிவலவனின்றேத்தும்" என்னும் இவ்வூர்த் தேவாரப்பகுதி இதற்குச் சான்றாகும். இலக்குமியால் பூசிக்கப்பெற்றது. இலக்குமிக்கு இரண்டாம் பிராகாரத்தில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக்கிழமைதோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது. வடகயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அப்பர் பெருமானுக்குக் காட்டியருளிய காட்சியை உணர்த்தும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற்கோயில், பெரியபுறத் திருச்சுற்றாலையின் தென்பால் (மூன்றாம் தெற்குப் பிராகாரத்தில்) இருக்கின்றது. அங்கு இறைவர் மணவாளக் கோலத்தோடு, சக்தியும் சிவமுமாக வீற்றிருந்து அருளுகின்றார். அப்பர் பெருமானின் அழகு திகழும் பிரதிமையும் அங்கு இருக்கின்றது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் கண்டியூரை வணங்கியபோது எதிரே தோன்றிய திருவையாற்றையும் வணங்க விரும்பினர். அப்பொழுது காவிரியில் வெள்ளப்பெருக்கு மிகுதியாக இருந்தமையால் அக்கரையிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் "ஐயாறுடைய அடிகளோ" என்று திருப்பதிகம் பாடிய அளவில், வந்து மீளுமளவும் காவிரியை வழிவிடச்செய்த பெருமையையுடையது இத்தலம். தம்மை வழிபட்டு வந்த ஒரு அந்தணச் சிறுவனைத் தொடர்ந்து வந்த யமனைத் தண்டித்து, அச்சிறுவனைச் சோதி வடிவமாக ஆட்கொண்ட காரணம்பற்றி ஆட்கொண்டார் என்னும் பெயருடையாரது திருமேனி தெற்குக்கோபுரவாயிலின் மேல்பால்
|