பக்கம் எண் :

243
 

இருக்கின்றது. அவருக்கு அருகில் தென்மேற்கு மூலையில் இருப்பவர் ஓலம் இட்ட பிள்ளையார் ஆவர். ஆட்கொண்டார்க்கு எதிரில் குங்கிலியக்குழி ஒன்று இருக்கிறது. அதில் மக்கள் குங்கிலியத்தை இட்டு வழிபடுகின்றனர். இத்தலத்தே இந்திரன், வாலி முதலியோர் வழிபட்டுப் பேறுபெற்றார்கள். இச்செய்தியை "எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட" எனச் சம்பந்தரும், "வாலியார் வணங்கி ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேன்" என அப்பர் பெருந்தகையும்அருளிச் செய்துள்ளதை இத்தலத்துத் தேவாரப்பகுதிகளால் அறியலாம்.

இறைவரைப் பூசித்த சைவர் ஒருவர் காசிக்குச் சென்று, குறிப்பிட்ட காலத்தில் வாராமையால் பூசைமுறை தவறியது. அதுபொழுது இறைவர் அச்சைவருடைய வடிவோடு இருந்து தம்மைத்தாமே பூசித்த சிறப்புடையது. இதைத்தான் "ஐயாறதனில் சைவனாகியும்" என்பார் திருவாசகத்தில். இப்பதிக்குப் பதினெட்டுத் தேவாரப்பதிகங்கள் இருக்கின்றன. திருவடிப் பெருமைகளை அப்பர்பெருமான் இருபது திருப்பாடல்களால் இத்தலத்தில் உணர்த்தியதுபோல் வேறு எப்பதியிலும் உணர்த்தாத அவ்வளவு பெருமையை உடையது.

இத்தலத்தில் நிகழும் விழாக்களுள் நந்திதேவர் திருமணத் திருவிழா. 'சித்திரைப்பெருந்திருவிழா' என்பவை மிகச் சிறந்தனவாகும். இவைகளுள் நந்திதேவர் திருமணத்திருவிழா, பங்குனி மாதத்தில் நிகழ்வதாகும். அதுபொழுது அம்மையப்பர் ஒரு தனி வெட்டிவேர் பல்லக்கிலும், நந்திதேவர் வேறு ஒரு வெட்டிவேர் பல்லக்கிலும் எழுந்தருளி, திருமழபாடிக்குச் செல்வர். அங்கே நந்தி தேவர்க்குத் திருமணத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே ஐயாற்றுக்கு எழுந்தருளும் விழா இதுவாகும்.

சித்திரைப்பெருந் திருவிழா: இது சித்திரைமாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பெற்ற கண்ணாடிப் பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, அந்தந்த ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப்பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது