சப்தஸ்தானத் திருவிழா என்பர். தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழ் ஊர்களையும் சுற்றிவரும் காட்சி போற்றத்தக்கதாகும். இத்திருக்கோயில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்து அருளாட்சியில் உள்ளது. இப்பொழுது ஆதீனத்தில் இருபத்தாறாவது பட்டத்தில் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள், பழங்காலத்துச் சோழமன்னர்களுடைய ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற சிறப்புக்களைப் போலவே இத்திருக் கோயிலின் நித்தியநைமித்தியங்கள் எல்லாவற்றையும் மிக்க சிறப்புறச் செய்வித்தருளுகின்றார்கள். இத்திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரம் பெரியபுறத் திருச்சுற்றாலை என்று கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளது. இப்பிராகாரத்தின் வடபால் ஒலோகமாதேவீச்சரம் என்னும் பெயருள்ள ஒருகற்கோயில் இருக்கின்றது. அது முதலாம் இராஜராஜ சோழனுடைய மனைவியாராகிய ஒலோகமாதேவியால் கட்டப்பெற்றதாகும். அம்மன்கோயில் புதிய திருப்பணியை உடையது. புலவர்கள் செய்யுளை அலங்கரிப்பது போல், தேவகோட்டை உ. ராம. மெசுப. சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் அழகுறத் திருப்பணி செய்திருக்கின்றனர். ஆடி அமாவாசை நாள் அப்பருக்குக் காட்சிகொடுத்த நாளாகும். அன்றும் திரளான மக்கள் வந்து கூடுவர். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஒரு வெண்பாவால் திருவையாற்றைப் பாடியுள்ளார்கள். அது சேத்திரத் திருவெண்பாவில் சேர்க்கப்பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு:- "குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி | நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி | ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே | ஐயாறு வாயால் அழை." |
இத்தல புராணம் ஞானக்கூத்தரால் இயற்றப்பெற்றது. தருமை ஆதீனம் அச்சிட்டுள்ளனர்.
|