பக்கம் எண் :

245
 

இத்திருக்கோயிலுள் அமைந்த ஐயாறப்பர்கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆகிய மூன்று கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளின் சுருக்கங்களே இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.

கல்வெட்டு:

பிற்காலத்துச் சோழமன்னர்களின் முதலாம் ஆதித்தன், முதலாம் பராந்தகன், இரண்டாம் ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜராஜன், விக்கிரமசோழன், மூன்றாங் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக்களும், பிற்காலத்துப் பாண்டிய மன்னர்களுள் கோச்சடையபன்மரான திருபுவனச் சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர் காலத்துக் கல்வெட்டும், வீரமுக்கண் உடையார் மகனார் வீரசரவண உடையார் காலத்துக் கல்வெட்டும், தஞ்சாவூரையாண்ட அச்சுதப்பநாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவைகளெல்லாம் ஐயாறுடைய அடிகளுக்குத் திருநந்தா விளக்குக்களுக்கும், நித்திய நைமித்தியங்களுக்கும் நிலவந்தங்கள் அளிக்கப் பெற்ற செய்திகளை உணர்த்துபவையே. எனினும் எல்லாக் கல்வெட்டுக்களுமே பல அரிய வரலாற்று உண்மைகளை அறிவிப்பவை யாயும் இருக்கின்றன.

ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் பல்லவ மன்னர் ஒருவரால் செய்விக்கப்பெற்ற கற்றளியை உடையதாகும். மூன்றாம் (பிராகாரத்தின்) திருச்சுற்றாலையின் கிழக்குக் கோபுரம் விக்கிரமசோழனால் கட்டப்பெற்றதாகும். இச்செய்தி "ஸ்வஸ்திஸ்ரீ இத்திருக்கோபுரம் விக்கிரமசோழனது" என்னும் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. மேலக் கோபுரவாயிலிலுள்ள அச்சுதப்ப நாயக்கர் காலத்துக் கல்வெட்டு, ஐயாறப்பர் கோயிலின் மேலக் கோபுரமும், முதல் பிராகாரமும், திருநடமாளிகைப் பத்தியும், ஐந்தாம் பிராகாரத்தின் தெற்குவாசலில் உள்ள சூரியபுட்கரிணியெனும் திருக்குளமும், மூன்றாம் பிராகாரத்தில் தெற்குக்கோபுரமும் ஆனையப்பபிள்ளை, அவர் தம்பி வைத்தியநாதர் என்போரால் எடுப்பிக்கப்பெற்றவை என்கிறது.

இத்திருப்பணிகளைப் புரிந்த ஆனையப்பப்பிள்ளையும் அவர் தம்பியும் மருதூர் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தஞ்சாவூர் ஐயன்வாசல் அருகில் இருந்தவர்கள். இவர்கள் உருவங்களோடு இவர்களுடைய பெற்றோர்களின் உருவங்களும் முதல் பிராகாரத்து மேற்குத் திருச்சுற்று மாளிகையில் இருந்துள்ளன. ஆனால் அவைகள் முற்றிலும்