பக்கம் எண் :

249
 

குலோத்துங்கசோழதேவர் இவர்களின் கல்வெட்டுக்கள் கோயிலில் நுந்தாவிளக்குக்களும் சந்திவிளக்குக்களும் வைப்பதற்குக் கொடுக்கப்பட்ட நிபந்தங்களைத் தெரிவிக்கின்றன.

இத்திருக்கோயிலின் திருச்சுற்றுமாளிகை கிருஷ்ணராஜ உடையாரால் எடுப்பிக்கப்பெற்றதாகும். இச்செய்தி கீழைத்திருச்சுற்று மாளிகையில் தென்பாலுள்ள கடைசித் தூணுக்கு அடுத்த வடபாலுள்ள தூணில் செதுக்கப்பட்டுள்ள "ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் கிருஷ்ணராஜ உடையார்" என்னும் கல்வெட்டால் புலப்படுகின்றது.

ஒலோகமாதேவீச்சரம்: இத் திருக்கோயிலைக் கட்டியவர் இஞ்சிசூழ்தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழமண்டலத்தைக் கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை ஆண்ட முதல் இராஜராஜ மன்னனுடைய முதல் மனைவியாராகிய ஒலோகமா தேவியாராவர். இவ்வம்மையாரால் கட்டப்பெற்றமையின் இது ஒலோகமாதேவீச்சரம் என்று பெயர்பெற்றது. இச்செய்தி "ஸ்ரீராசராசதேவர் நம்பிராட்டியார் தந்திசத்திவிடங்கியாரான ஒலோகமாதேவியார் வடகரை ராசேந்திரஸிம்ஹ வளநாட்டுத் தேவதான திருவையாற்றுப்பால் எடுப்பித்த திருக்கற்றளி ஒலோகமாதேவீச்சரமுடையார்க்கு" என்னும் இக்கோயிற் கல்வெட்டுப்பகுதியால் அறியக்கிடக்கின்றது.

இக்கோயிலில் முதல் இராஜராஜன், அவன் மகனாகிய முதல் இராஜேந்திரன், அவன் மகனாகிய முதல் இராஜாதிராஜன் என்னும் மூன்று சோழமன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றுள் முதலாம் இராஜராஜன் அரியணையேறிய இருபத்தொன்றாம் ஆண்டுக் கல்வெட்டே பழமையானது. அதிலேதான் ஒலோகமாதேவியார் இத்திருக்கோயிலைக் கட்டிய செய்தி குறிக்கப் பெற்றுள்ளது. அந்த முதலாம் இராஜராஜசோழன் கி.பி. 985 இல் பட்டம் எய்தியவன் ஆவன். அவன் ஆட்சி ஆண்டாகிய கி.பி. 985 உடன் இருபத்தொன்றைக் கூட்ட கி.பி. 1006 ஆகும். எனவே இற்றைக்கு (1954-1006) 948 ஆண்டுகளுக்குமுன் இத்திருக்கோயில் கட்டப்பெற்றதாகும்.

இத்திருக்கோயிலில் இவ்வம்மையார் ஒலோகமாதேவீச்சரமுடையார், ஒலோகவிடங்கதேவர், அவர்தம் பிராட்டியார், பிள்ளையார், முருகர், ஆடவல்லார், சண்டேசுவரர் இவர்களின் திருமேனிகளை எழுந்தருளுவித்துள்ளார். இவர்களுள் ஒலோக மாதேவீச்சரமுடையார் என்பது கருப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருப்பெயராகும்.