ஒலோகவிடங்கதேவர், ஆட வல்லார் என்பன முறையே தியாகராசப்பெருமான், நடராசப்பெருமான் இவர்களுடைய திருப்பெயர்களாகும். இக்கோயிற் சிவபெருமானுக்கு நான்குகால பூசைகள் நடைபெற்று வந்தன. நெய்கொண்டு நொந்தாவிளக்குக்களும் சந்தி விளக்குகளும் பல ஏற்றப்பட்டு வந்தன. பருப்பமுது, கறியமுது, போனகம், பொறிகறியமுது, தயிரமுது, சர்க்கரையமுது, அப்பமுது இவைகள்கொண்டு திருவமுது செய்விக்கப்பட்டன. இவ்வம்மையார் தம் கணவன் பிறந்த நாளாகிய சதயத் திருவிழாப் பன்னிரண்டும், சித்திரைப்பெருந்திருவிழா ஒன்றும் ஆகப் பதின்மூன்று திருவிழாக்களையும் இத்தலத்து நடத்துவித்தார். இவ்வம்மையாரும் இவர் குடும்பத்தார்களும் கொடுத்துள்ள பொன்னாற்செய்து மணிகள் பதித்த அணிகலன்களுக்கும் வெள்ளியாற்செய்த பரிகலங்களுக்கும் அளவில்லை. அணிகலன்களையும் பரிகலங்களையும் எவரும் மாற்றிவிடா வண்ணம் நிறையெடுத்தும், அவற்றில் மணிகள் சேர்க்கப்பெற்றிருப்பின் அவை இத்துணை என்று உரைத்திருப்பதும் மகிழ்தற்குரியதாகும். இக்காலத்தில் வழக்கத்தில் இல்லாத பல அணிகலன்களின் பெயர்கள் இக்கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன. அவைகள் கோளகை, தாழ்கூட்டுக்கம்பி, திருச்சன்னவடம், முத்தின்காரை, இடுக்குவளையல் முதலியன. இக்கோயிலில் வழிபாடு நடக்குங்கால் உடுக்கை, உவச்சன் தலைப்பறை, கண்டை, திமிலை, மத்தளம், வீணை, கரடிகை முதலியவைகள் ஒலிக்கப்பெற்றுவந்தன. 1இக்கோயிலில் ஆடல் பாடல் முதலிய பணிகளைச் செய்வதற்குப் பதியிலார் முப்பத்திருவர் இருந்தனர். அவர்கள் தலைக் கோற்பட்டம் பெற்றவர்கள். தலைக்கோல் என்பது ஆடல்பாடல்களில் சிறந்த பதியிலார்களுக்கு அரசனால் கொடுக்கப்பெற்ற பட்டமாகும்.
1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1894 No. 213-256, No. 135-157, year 1924 No. 48. Also see the South Indian Inscriptions, Vol. V, No. 512-555. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, ஞானசம்பந்தம் ஆறாவது ஆண்டு மலர்.
|